ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளம், போக்குவரத்து நெரிசல், உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முன்னுரிமை- பிரகாஷ்

சுபாங் ஜெயா, டிச 6- கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளம், போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டுவது உள்ளிட்டப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தனது தலையாய நோக்கமாக உள்ளது என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.

இந்த தொகுதியைப் பொறுத்த வரை வெள்ளம் சவால்மிக்க  பிரச்சனையாக இருந்து வருவதாகக் கூறிய அவர், இந்த பிரச்சனைக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாகச் சொன்னார்.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உயிழப்புகளும் பெருத்த பொருட்சேதமும் ஏற்பட்டதை நாம் மறக்க முடியாது. இப்போதுகூட கடுமையாக மழை பெய்யும் போதெல்லாம் தாமான் ஸ்ரீ மூடா, புக்கிட் கெமுனிங், புக்கிட் லஞ்சோங் பகுதி மக்கள் வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருப்பதைக் காண முடிகிறது

ஆகவே, இதனைத் கருத்தில் கொண்டு வெள்ள நிவாரண நடவடிக்கைகளைக் காட்டிலும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் பேஸ்புக் வாயிலாக நேற்று ஒளிபரப்பான சுபாங் ஜெயா காஃபி டாக் (subang jaya coffee talk) எனும் நிகழ்வில் கலந்து கொண்டு நெறியாளரின் கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் வெள்ளம் ஏற்பட்ட போது நாம் மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக மட்டும் சுமார் 30 கோடி வெள்ளியைச் செலவிட்டோம். இந்த தொகையைக் கொண்டு முறையான வெள்ளத் தடுப்புத் திட்டங்களை அமல்படுத்தியிருந்தால் இத்தகைய பேரிடர்களின் தாக்கத்தைக் குறைத்திருக்கலாம் என்றார் அவர்.

போக்குவரத்து நெரிசல்

கோத்தா கெமுனிங் தொகுதியில் குறிப்பாக கோத்தா கெமுனிங் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து கருத்துரைத்த பிரகாஷ், அந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் நிதிப்பற்றாக்குறையும் ஒரு காரணமாக உள்ளது என்று சொன்னார்.

அங்கு மேம்பாலம் அமைப்பதற்கு பெரும் தொகை தேவைப்படும். ஆயினும் மாநில அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. இதற்கு மாற்றாக சிங்கப்பூரில் அமல்படுத்தப்பட்டதைப் போல் ஐ.டி.எஸ். எனப்படும் நுண்ணறிவு போக்குவரத்து முறையை நாம் அமல்படுத்தலாம்.மாநில சட்டமன்றத்திலும் இந்த பரிந்துரையை நான் முன்வைத்துள்ளேன். இந்த முறையின் கீழ் செயற்கை நுண்ணறிவு வாயிலாக வாகனப் போக்குவரத்து சீராக இருப்பது உறுதி செய்ய முடியும் என  அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத குப்பை பிரச்சனை

கோத்தா கெமுனிங் தொகுதியில் சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படும் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதும் தனது பிரதான நோக்க்கங்களில் ஒன்று என பிரகாஷ் கூறினார்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் பொருளாதார ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக ஊராட்சி மன்றச் சட்டங்கள் மிகவும் பலவீனமானவையாக உள்ளதால் சட்டவிரோதமாக குப்பைகளை வீசுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆகவே தூய்மையான மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதை உறுதி செய்ய சட்டவிரோதமாக குப்பைகளை வீசுவோருக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்குவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

இளைஞர் மேம்பாடு

தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு ஆக்கத் திறனளிப்பதற்கு ஏதுவாக  திறன் மேம்பாட்டு பயிற்சிகளை எஸ்.பி.எம். முடித்த மாணவர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர விரும்புவதாக பிரகாஷ் சொன்னார். திவேட் எனப்படும தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் பயற்சித் திட்டத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க  விரும்புகிறேன். இதன் தொடர்பில் மனிவள அமைச்சருடன் கலந்தாலோசிக்கவும் உள்ளேன். இத்தகைய பயிற்சிகளைப் பெற்ற இளைஞர்களுக்கு வேலை  வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் பல நிறுவனங்களுடன் பேச்சு நடத்தியுள்ளேன். அவர்களும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார். 

மேலும் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதிலும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக கூறிய அவர், இதன் மூலம் அவர்கள் தவறான வழிகளில் செல்வதை தவிர்க்கவும் உடலாரோக்கியதைப் பேணவும் வாய்ப்பு கிட்டும் என்றார். 


Pengarang :