ECONOMYMEDIA STATEMENTNATIONAL

27 முறை கத்தியால் குத்தப்பட்டு முதியவர் படுகொலை- பெண் உள்பட மூவர் விசாரணைக்காக தடுத்து வைப்பு 

ஜோர்ஜ் டவுன், டிச 6- இங்குள்ள ஜாலான் பேராக், அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்துமிடத்தில் நேற்று மாலை முதியவர் ஒருவர் 27 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டச் சம்பவம் தொடர்பில் இரு ஆடவர்களையும் ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இருபத்தொன்பது முதல் 42 வயது வரையிலான அம்மூவரும் ஜெலுத்தோங்கின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு 7.30 மணிக்கு கைது செய்யப்பட்டதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் வி.சரவணன் கூறினார்.

இந்த கொலை தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்ட அம்மூவரும் படுகொலை செய்யப்பட்ட முதியவரின் நெருங்கிய நண்பர்கள் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அம்மூவரும் வரும் 8ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்தவர்கள் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆடவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டது குறித்து நேற்று மாலை 6.18 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்ட நபரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததார்.

அந்த ஆடவரின் உடலில் கத்தியால் குத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 27 காயங்கள் காணப்பட்டதை மருத்துவச் சோதனையின் முடிவுகள் காட்டுகின்றன என்று சூப்ரிண்டெண்டன் சரவணன் தெரிவித்திருந்தார்..

அந்த குடியிருப்பு பகுதியின் கார் நிறுத்துமிடத்திற்கு  மோட்டார் சைக்கிளில் இரு ஆடவர்கள் நுழைந்த வேளையில் அவர்களில் ஒருவன் அந்த முதியவரை சரமாரியாக குத்தியப் பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என அவர் தெரிவித்தார்.


Pengarang :