ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

போர்ட் கிள்ளானில் செயல்பட்டு வந்த நான்கு சட்டவிரோத பட்டறைகளுக்கு எதிராக எம்.பி.கே. நடவடிக்கை

ஷா ஆலம், டிச 9- போர்ட் கிள்ளான், ஜாலான் ராஜா மூடா மூசா வட்டாரத்தில் செயல்பட்டு வந்த நான்கு சட்டவிரோத வாகன பழுதுபார்ப்பு பட்டறைகளுக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் சீல் வைத்தது.

அந்த நான்கு பட்டறைகளும் திட்டமிடல் அனுமதி மற்றும் கட்டிட நிர்மாணிப்பு அனுமதியையும் பெற்றிருக்கவில்லை என்று நகராண்மைக் கழகம் கூறியது.

கார் பழுதுபார்ப்பு பட்டறை, வாகனங்களுக்கு சாயம் பூசும் பட்டறை மற்றும் கனரக வாகனங்களை நிறுத்தி வைக்கும் பட்டறை ஆகிய அந்த அனைத்து வர்த்தக மையங்களும் நகராண்மைக் கழகத்தின் உரிமத்தைக் கொண்டிருக்கவில்லை என்று அது தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

லைசென்ஸ் இன்றி செயல்பட்ட குற்றத்திற்காக அந்த நான்கு பட்டறைகளுக்கும் எதிராக 1976ஆம் ஆண்டு ஊராட்சி மன்றச் சட்டத்தின் 101(1)(வி) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அது குறிப்பிட்டது.

இது தவிர  நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டத்தின் 19வது பிரிவின் கீழ் அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்களை நிறுத்தி பழைய நிலைக்கு கொண்டு வரும்படியும் நகராண்மைக் கழகத்தின் நகர மற்றும் கிராம திட்டமிடல் பிரிவு உத்தரவிட்டுள்ளதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


Pengarang :