ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மடாணி பொருளாதாரத் திட்டங்களுக்கு 82 விழுக்காட்டினர் ஆதரவு- யு.யு.எம். ஆய்வு கூறுகிறது

கோலாலம்பூர், டிச 9- கடந்தாண்டு நவம்பர் மாதம் 24ஆம தேதி பதவியேற்றப் பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 30 மக்கள் நலத் திட்டங்களை 82 விழுக்காட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதோடு ஆதரவும் தந்துள்ளதை “மடாணி பொருளாதார முன்னெடுப்புகள்- மக்களின் ஆதரவு“ எனும் தலைப்பிலான ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

இந்த ஆய்வினை வட மலேசிய பல்கலைக்கழகம் (யு.யு.எம்.) இரு அரசு சாரா அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் கடந்த நவம்பர் 1 முதல் டிசம்பர் 4 வரை மேற்கொண்டது. இந்த ஆய்வில் பல இன, பாலின மற்றும் வயதுடைய 4,606 பேர் பங்கு கொண்டனர். 

இவர்கள் அனைவரும் நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள 2 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரத்து 409 வாக்காளர்களில் குத்துமதிப்பாக தேர்ந்தெடுக்ப்பட்டனர்.

உதவித் தேவைப்படுவோருக்கு குறிப்பாக ஏழைகளுக்கு உதவும் நோக்கிலான ஒற்றுமை அரசாங்கத்தின் திட்டங்களுக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருவதை இந்த ஆய்வுகள் காட்டுவதாக யு.யு.எம். வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

ஏழை நெல் விவசாயிகளுக்கு உதவுவதற்காக 6 கோடி வெள்ளியை வழங்க பாடிபெராஸ் நேஷனல் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு 96 விழுக்காட்டு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இரு விழுக்காட்டினர் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மிகவும் வறிய நிலையை துடைத்தொழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு 93 விழுக்காட்டினர் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர். இத்திட்டத்திற்கு மூன்று விழுக்காட்டினரிடமிருந்து ஆட்சேபம் எழுந்துள்ளது.

ஏழைக் குடும்பங்களுக்கு உதவும் நோக்கிலான ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்திற்காக கூடுதலாக 60 கோடி வெள்ளியை ஒதுக்கும் அரசின் முன்னெடுப்பு 93 விழுக்காட்டினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Pengarang :