ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தாமான் ஸ்ரீ மூடாவில் வடிகால்களை தரம் உயர்த்தும் பணி  87 விழுக்காடு பூர்த்தி

ஷா ஆலம், டிச.11- இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணி 87 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளது.  வரும் ஜனவரி இறுதிக்குள்  இப்பணி முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் 68 லட்சம் வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம்   கடந்த 2021 ஜூலை  மாதம் தொடங்கப்பட்டது என்று  கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.

இந்த திட்டத்தின் அசல் செயலாக்க காலம் ஜூலை 2021 ஜூலை 1ஆம் தேதி முதல்  முதல்  2023 ஜூலை  1ஆம் தேதி வரையிலான  24 மாதங்கள் ஆகும். இருப்பினும், சில தடைகள் காரணமாக இந்த திட்டம் அடுத்தாண்டு  ஜனவரி 24 வரை நீட்டிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த  2021 டிசம்பரில்  ஏற்பட்ட பெரு வெள்ளம், நோய்த் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை,   மற்றும்  துணை மின் நிலையம் அமைப்பதற்கு தெனாகா நேஷனல் பெர்ஹாட்  நிறுவனத்திடமிருந்து  ஒப்புதல் கிடைப்பதில்  தாமதம் ஆகியவை  இத்திட்டம் அமலாக்கம் காண்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு காரணமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தடுப்பணைகளைத் தரம் உயர்த்துவது, நீர் இறைப்பு  இயந்திரங்களைப் பொறுத்துவது, சிறிய துணை மின் நிலையம் அமைப்பது  ஆகியவை இந்த வெள்ளத் தடுப்புத் திட்டத்தின்  முக்கிய இலக்குகளாகும் என்றார் அவர்.

இதற்கிடையில், வடிகால் மற்றும் நீர்பாசன இலாகா மேற்கொண்டு வரும் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் தவிர்த்து  ஷா ஆலம் மாநகர் மன்றமும் பல திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.

பெர்சியாரான் அமானில் பம்ப் ஹவுஸ் எனப்படும் நீர் இறைப்பு கருவிகளைப் பொருத்தும் பணி  கட்டும் பணி 95 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் ஜாலான் சக்ஸமா 25/39 மற்றும் ஜாலான் ஹிட்மாட் 25/35 ஆகிய இடங்களில்  80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றார் அவர்.

இது தவிர,  ஜாலான் ஜெமிலாங் 25/1 மற்றும் ஜாலான் அபாடி 25/58 இல் உள்ள கழிவுநீர் வடிகால் மற்றும் வடிகால்களை  மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது என்று அவர் கூறினார்


Pengarang :