ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அந்நிய நாட்டினருக்கு கடைகளை  வாடகைக்கு விடுவோரின் வர்த்தக-  லைசென்ஸ் ரத்து- டி.பி.கே.எல் எச்சரிக்கை

கோலாலம்பூர், டிச 22-  இங்குள்ள ஜாலான் சீலாங்கில் வணிக விதிகளை மீறி கடைகளை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விடுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட  வணிகர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் அல்லது   தற்காலிகமாக முடக்கப்படும் என்று  கோலாலம்பூர் மாநகர் மன்றம்  (டி.பி.கே.எல்.)  எச்சரித்துள்ளது

வணிக வளாக உரிமையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை முறையாக பயன்படுத்த வேண்டுமே தவிர  வெளிநாட்டவர்கள் வணிகம் செய்வதற்கு வழங்கக்கூடாது என்று பிரதமர் துறை  துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஜாலிஹா முஸ்தாபா கூறினார்

ஆகவே, நான் அந்த நடவடிக்கை பற்றிய கூடுதல் தகவல்களை   பெறவிருக்கிறேன். தலைநகரின் முக்கிய வணிக இடங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அந்நிய நாட்டு வர்த்தகர்களை துடைத்தொழிப்பதில் மாநகர் மன்றம் முக்கிய கவனம் செலுத்துகிறது  என்று அவர் சொன்னார்.

பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தலைமையில் இன்று நடைபெற்ற காசே ஹராப்பான்  காக் வான் 3ஆம் கட்ட  வீடுகளுக்கான சாவி ஒப்படைப்பு விழாவிற்குப் பிறகு டாக்டர் ஸாலிஹா செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

ஜாலான் சீலாங்கில் நேற்று  அரச மலேசிய போலீஸ் படையின் பொது தற்காப்புப் பிரிவு  மேற்கொண்ட  ஒருங்கிணைந்த  நடவடிக்கையின் விரிவான தகவலுக்காக தமது தரப்பு காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

நேற்று, ஜாலான் சீலாங்கைச் சுற்றியுள்ள 60 வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் விளைவாக மொத்தம் 1,101 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியில் நிகழும் குற்றங்களை துடைத்தொழிப்பதற்காக இந்த  ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Pengarang :