MEDIA STATEMENTPBT

ஷா ஆலம் மாநகர் மன்றம் வெ.33.5 கோடி மதிப்பிட்டு வரியை வசூலித்தது

ஷா ஆலம், டிச 23- இம்மாத தொடக்கம் வரையிலான காலக்கட்டத்தில் 33 கோடியே 50 லட்சம் வெள்ளி  மதிப்பீட்டு வரியை ஷா ஆலம் மாநகர் மன்றம் வசூலித்துள்ளது. 

இவ்வாண்டிற்கான வரி வசூலிப்பு இலக்கான 29 கோடியே 60 லட்சம் வெள்ளியை விட இத்தொகை அதிகமாகும் என்று ஷா ஆலம் இடைக்கால டத்தோ பண்டார் செரேமி தர்மான் கூறினார்.

மொத்த வரி பாக்கியில் 4 கோடியே 6 லட்சம் வெள்ளியை இவ்வாண்டு வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 6 கோடியே 78 லட்சம் வெள்ளி அல்லது 55 விழுக்காடு இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்றத் தலைமையகத்தில் நடைபெற்ற மாநகர் மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வரி பாக்கி வைத்துள்ள தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிரான வர்த்தகத் தடை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை (ஐ-செக்காட்) மாநகர் மன்றம் அடுத்தாண்டு தீவிரப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்த ஐ-செக்காட் திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை 5 கோடியே 20 லட்சம் வெள்ளி வரிபாக்கி வசூலிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாகன நிறுத்தமிட குற்றங்களுக்கான அபராதம், மதிப்பிட்டு வரி, லைசென்ஸ் கட்டணம், வாடகை, மின் கட்டணம், காலி வளாகங்களை சுத்தம் செய்வதற்கான கட்டணம் ஆகியவற்றை இத்தொகை உள்ளடக்கியிருந்தது என்றார் அவர்.


Pengarang :