ECONOMYMEDIA STATEMENT

பலாக்கோங் தொகுதியில் மலிவு விற்பனை- இரண்டு மணி நேரத்தில் 500 கோழிகள் விற்பனை

காஜாங், டிச 23-  சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று இங்கு நடைபெற்ற பலாக்கோங் தொகுதி நிலையிலான ஏஹ்சான் ரஹ்மா விற்பனையில்  துண்டுகளாக நறுக்கப்பட்ட  1.5 கிலோ  கோழியை 10.00 வெள்ளி விலையில் வாங்கும்  வாய்ப்பு பொது மக்களுக்கு கிட்டியது.

துண்டுகளாக வெட்டப்பட்ட கோழிகள் அடங்கிய  150  பொட்டலங்களும்  350 முழு கோழிகளும் இங்கு விற்பனைக்கு  வைக்கப்பட்டதாக  அதன் விற்பனை ஒருங்கிணைப்பாளர் முகமது நசிஃப் ஜூல்கிப்ளி கூறினார்.

இந்த விற்பனையின் மூலம் இரண்டு மணி நேரத்தில் அனைத்து  500 பை  கோழிகளும் விற்றுத் தீர்ந்தன. கோழி  தவிர,  300  தட்டு முட்டை மற்றும் 300  பாக்கெட்  அரிசியை பி.கே.பி.எஸ். இங்கு கொண்டு வந்தது.  சந்தையை விட  குறைந்த விலையாக இருந்த காரணத்தால் இந்த மூன்று பொருட்களும் குறிப்பாக கோழி பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது  அவர் குறிப்பிட்டார்.

விழாக்காலம் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டாலும் இந்த விற்பனைக்கு பொது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்தது  என்றார் அவர்.

இந்த விற்பனையில் பங்கேற்க பொது மக்கள்  காலை 8.00 மணி முதலே  வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர்.  நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில்  விற்பனை நடவடிக்கைகளை முன்கூட்டியே  தொடங்கினோம் என்று அவர் கூறினார்.

இந்த ஏஹ்சான் ரஹ்மா விற்பனையில்  புரோமோசெல் விநியோகக் குழு மூலம் சிலாங்கூர் கினி பத்திரிகையின் 600 பிரதிகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்
முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு
கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 2,850 இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனையின் வாயிலாக
இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.


Pengarang :