ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

கைக்கோர்ப்போம் களமிறங்குவோம் என்ற வெற்றி முழக்கத்துடன் பீடு நடை போடுகிறது ஆர்.ஆர்.ஐ தமிழ்ப் பள்ளி

செய்தி சு.சுப்பையா

சுபாங்.டிச.23- நாட்டில் உள்ள மிக மூத்த தமிழ்ப் பள்ளிகளில் ஒன்று தான் ஆர்.ஆர். ஐ. தோட்ட தமிழ்ப்பள்ளி ( இரப்பர் ஆய்வு கழகம் ). பெட்டாலிங் உத்தாமா மாவட்ட கல்வி இலாக்காவில் 4 தமிழ்ப் பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. இதில் முதல் இடத்தில் ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப் பள்ளி இருக்கிறது. கல்வி மேம்பாடு, புறப்பாட நடவடிக்கை,  அறிவியல் நடவடிக்கை என்று எல்லாவற்றிலும் சிறந்து வெற்றி நடை போடுகிறது என்று அப்பள்ளியின் மூத்த துணைத் தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

இப்பள்ளியில் தற்போது 417 மாணவர்கள் பயில்கின்றனர். 24 ஆசிரியர்கள் கல்வி போதிக்கின்றனர். மொத்தம் 12 வகுப்பறைகளுடன் 6 டி.எல்.பி. வகுப்பும் சிறப்பாக நடைபெறுகின்றன.

புறப்பாட நடவடிக்கைகளில் இப்பள்ளி முதன்மை வகிக்கிறது. ஆர்.ஆர்.ஐ. தோட்ட வளாகத்தில் மிகப்பெரிய கால்பந்தாட்ட திடல் இருக்கிறது. இதனால் இப்பள்ளி மாணவர்கள் கால்பந்து, கபடி விளையாட்டு போட்டிகளில் முன்னணி வகிக்கின்றனர்.

அறிவியல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியுள்ளனர். கல்வி மேம்பாட்டிலும் முன்னணி வகிக்கிறது. இதனால் தான் முதலாம் ஆண்டு மாணவர்கள் பதிவு ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

தற்போது வகுப்பறை பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அதிகமான மாணவர்களை எடுக்க முடியவில்லை என்று மிக வருத்தத்துடன் துணைத் தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஆர்.ஆர்.ஐ. ஆய்வு கழகம் 1926 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. தமிழ்ப்பள்ளி 1929 ஆம் ஆண்டு 16 மாணவர்களுடன் தொடங்கியது.  இருப்பினும் தற்போது உள்ள கட்டடம் 1934 ஆம் ஆண்டு கட்டப் பட்டது. அதனால் 1934 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளியின் வரலாறு அதிகாரப்பூர்வமாக  தொடங்குகிறது.

அடுத்த ஆண்டு இப்பள்ளி 90 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் இப்பள்ளியின் 66 ஆம் ஆண்டு வருடாந்திர போட்டி விளையாட்டு நடைபெற்று முடிந்தது.

திடல் தட போட்டி விளையாட்டிலும் இப்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

இப்பள்ளிக்கு பெற்றோர்களின் ஆதரவு பாராட்டத்தக்கது. இரப்பர் ஆய்வுக் கழகமும் பள்ளிக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறது.

2008 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்பள்ளிக்கு சிலாங்கூர் மாநில அரசும் தொடர்ந்து நிதியுதவி செய்து வருகிறது.

இப்பள்ளியின் நிலப்பிரச்னை விரைவில் நல்ல முறையில் கலந்து பேசி தீர்வு காணப்படும் என்று நம்புவதாக பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோர் ஒருவர் தெரிவித்தார்.

விரைவில் இப்பள்ளி புதிய இடத்தில் புதிய கம்பீரமான நவீன வசதிகள் கொண்ட கட்டடமாக அமைய வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

தலைமை ஆசிரியர் புஸ்பராணி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசர், பள்ளி மேலாளர் வாரியம் அனைவரும் ஒன்றுக் கூடி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

இப்பள்ளியின் நிலப்பிரச்னை மிக நீண்ட காலமாக இழுப்பறி நிலையாக இருந்து வருகிறது. பெற்றோர்களும்  ஆர்.ஆர்.ஐ. தோட்ட பொது மக்களும் இப்பிரச்னைக்கு நல்ல முடிவு காண வேண்டும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :