ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இஸ்லாமிய சட்ட  விவகாரங்களில் தலையீடு-  புருவாஸ் எம்.பி. மன்னிப்பு கோரினார்

கோலாலம்பூர், டிச 31– இஸ்லாமிய சட்டங்களை இயற்றுவதில் மாநில சட்ட மன்றங்களின் தகுதி தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்வதில் சிறப்புக் குழுவிற்கு உதவுவதற்காக முஸ்லிம் அல்லாத நிபுணர்களை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்ற தனது பரிந்துரைக்காக  புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்   டத்தோ ங்கே கூ ஹாம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இந்த பரிந்துரையை மீட்டுக் கொண்ட அவர்,  இஸ்லாமிய மத விவகாரங்களுக்கான தேசிய மன்றம் அந்த சிறப்புக் குழுவை அமைத்துள்ளதும் அதற்கு சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் தலைமையேற்றதும் தனக்குத் தெரியாது என்று கூறினார்.

ஆகவே, நான் எனது பரிந்துரையை நான் திரும்பப் பெறுகிறேன். இதற்காக  எனது மனப்பூர்வ  மன்னிப்பையும் கோருகிறேன். இஸ்லாமிய விவகாரங்களில் தலையிடும் எண்ணம் எனக்கு இல்லை என்று அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இஸ்லாம் தொடர்பான விஷயங்களில் தலையிடாமல் மதித்து நடக்க வேண்டும் என்று மக்களுக்கு, குறிப்பாக முஸ்லீம் அல்லாதவர்களுக்கு சிலாங்கூர் சுல்தான் நேற்று முன்தினம் நினைவூட்டினார்.

முஸ்லீம் சமூகம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் மேற்பார்வையிடும் பொறுப்பு சமய விவகாரங்கள் மீதான தேசிய மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் குறிப்பாக இஸ்லாமிய சட்டம் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட வல்லுநர்களை இந்த மன்றம் கொண்டுள்ளது என்றும் சுல்தான் கூறினார்.

எனவே, அரசியல்வாதிகள், குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாம் தொடர்பான விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :