ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

கம்போங் பூங்கா ராயா நீண்ட வீட்டு பிரச்சனைக்குத் தீர்வு காண ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு களமிறங்கினார்

செய்தி.சு.சுப்பையா

ஷா ஆலம்.ஜன.5-  சிலாங்கூர் மாநில அரசு தலைமையகத்தில் உள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டுவின் அலுவலகத்தில் 30 ஆண்டு கால கம்போங் பூங்கா ராயா நீண்ட வீட்டு பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண சிறப்பு சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

தற்போதைய நிலையில் 118 குடும்பங்களின் வீட்டு பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண அனைத்து தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர் என்று இக்கூட்டத்திற்கு தலைமையேற்ற பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு  தெரிவித்தார்.

இந்த சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு , கோத்தா டமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் இசூவான் காசிம், சுங்கை பூலோ மக்கள் நீதிக் கட்சியின் தொகுதி தலைவர் சிவராசா, சிலாங்கூர் மாநில அரசின் வீடமைப்பு துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் துவான் பொர்ஹானின் பிரதிநிதிகள், கம்போங் பூங்கா ராயா மக்கள் பிரதிநிதி கணேசன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கம்போங் பூங்கா ராயா வீட்டு பிரச்சனை தனியார் நிறுவன  நிலத்தில் உள்ள பிரச்சனை. அந்த நில உரிமையாளர் குடியிருப்புவாசிகளை வெளியேற்ற நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளதால்  எழுந்துள்ள இப்பிரச்னைக்கு முறையான தீர்வு விரைவில் காண வேண்டும்.

ஏற்கனவே இரண்டு முறை மின்சாரம், குடிநீர் துண்டிக்க மேம்பாட்டாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதனை பேசி ஒத்திவைத்துள்ளோம். அடுத்த ஒரு வார காலத்தில் குடியிருப்பு வாசிகள் தற்காலிகமாக சிலாங்கூர் மாநில அரசு கைவசம் உள்ள வீடுகளில் மறு குடியமர்த்த  சம்மதம் பெறப்படும் என்றார்.

கம்பத்து தலைவர் மற்றும் பிரதிநிதிகள் நீண்ட வீடுகளில் குடியிருக்கும் மக்களைச் சந்தித்து பேசி 33 குடும்பங்களை தற்காலிகமாக மாற்று வீடுகளுக்கு செல்வது குறித்து சம்மதம் பெற வேண்டும்.

தற்காலிக வீட்டுக்கு மாற்றப்பட்ட பிறகு அருகில் காலியாக இருக்கும் சிலாங்கூர் கூ வீடுகளை அவர்களுக்கு விற்பது மற்றும் மாற்று  ஏற்பாடுகள் குறித்து  முடிவு காணப்படும்  .

முதலில் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மாநில அரசுக்குச் சொந்தமான வீடுகளில்  குடியமர்த்தப்பட்டு, பின் 118 குடும்பங்களுக்கும்  ஒரே இடத்தில் வீடு ஏற்பாடு செய்யப்படும், ஆனால்  அதற்கு குறைந்தது 3 ஆண்டு காலம் பிடிக்கும் என்று வீ.பாப்பாராய்டு  தெரிவித்தார்.


Pengarang :