ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2024 முதல் வாரத்தில் நடத்தப்பட்ட ஒன்பது சோதனைகளில் வெ.2.2 கோடி பொருள் பறிமுதல் 

கோலாலம்பூர், டிச 6- கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் வனவிலங்கு குற்றப் பிரிவும் சிறப்பு உளவுப் பிரிவும் இணைந்து நடத்திய ஒன்பது சோதனை நடவடிக்கைகளில் 15 பேர் கைது செய்யபட்டதோடு 2 கோடியே 19 லட்சத்து 17 ஆயிரத்து 419 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வன விலங்குகள் மற்றும் போலி மருந்துகள் கடத்தல், மானிய விலை டீசல் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த சோதனை நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இயக்குநர் டத்தோ ஹஸானி கசாலி கூறினார்.

இந்நடவடிக்கைகளின் போது 2010ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புக் சடத்தின் கீழ் 116,000 வெள்ளி மதிப்புள்ள  பொருள்களும் 1961ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் 66 லட்சத்து 1 ஆயிரத்து 449 வெள்ளி மதிப்புள்ள பொருள்களும் 1983ஆம் ஆண்டு உணவு பாதுகாப்புச் சட்டத்தின் 22வது பிரிவின் கீழ் 1 கோடியே 32 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.

இவை தவிர தேசிய வன விலங்கு பாதுகாப்புச் சட்ட மீறல் தொடர்பான குற்றங்களுக்காக 15 லட்சம் வெள்ளி மதிப்பிலான பொருள்களும் 1952ஆம் ஆண்டு மருந்துச் சட்டத்தின் கீழ் 5 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இத்தகைய குற்றச்செயல்களைத் துடைத்தொழிப்பதில் பொது மக்களின் ஒத்துழைப்பு தங்களுக்கு மிகவும் தேவைப்படுவதாக கூறிய அவர், இது போன்ற குற்றங்களைத் தடுப்பதில் இதர அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்குரிய தொலைநோக்குத் திட்டத்தை  அமல்படுத்த வனவிலங்கு குற்றப் பிரிவும் சிறப்பு உளவுப் பிரிவும் கடப்பாடு கொண்டுள்ளன என்றார்.


Pengarang :