ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிங்கப்பூருக்கான ஒரு நாள் பயணத்தில் வெ.280 கோடி முதலீட்டை மலேசியா ஈர்த்தது

கோலாலம்பூர், ஜன 12- முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சு (மிட்டி) சிங்கப்பூருக்கு மேற்கொண்ட ஒரு நாள் முதலீட்டுப் பயணத்தில் அந்நாட்டைச் சேர்ந்த இரு நிறுவனங்களிடமிருந்து 280 கோடி வெள்ளிக்கான நேரடி அந்நிய முதலீட்டைப் பெற்றது.

இக்குனிக்ஸ் இன்க். நிறுவனம் கிளவுட், நெட்வேர்க்கிங், கம்யூட்டர் ஸ்டோரேஜ், மென்பொருள் மற்றும் இலக்கவியல் செயலிகளில் போட்டித் தன்மையை விரிவாகக் கண்டறிய நிறுவனங்களுக்கு உதவுகிறது என்ற அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜப்ருள் தெங்கு அஜிஸ் கூறினார்.

அந்த டிஜிட்டல் கட்டமைப்பு நிறுவனம் ஆஸ்திரேலியா, சீனா ஹாங்காங், இந்தியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் உள்பட ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள 13 நகரங்களில் 52 தரவு மையங்களை கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

ஆசிய பசிபிக்கை இணைக்கும் அனைத்துலக மற்றும் பிராந்திய ஒருங்கமைப்பில் நுழைவதற்கான ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தள அலுவலகத்தை ஜோகூர் பாரு மற்றும் கோலாலம்பூரில் திறக்க இக்குயினிக்ஸ் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார். 

இந்த பயணத்தின் போது மலேசியாவில் தளத்தைக் கொண்டுள்ள அனைத்துலக உணவு உற்பத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகளையும் தெங்கு ஜப்ருள் சந்தித்தார்.

மலேசியாவில் தங்கள் வர்த்தகத்தைத் திறக்க அல்லது விரிவுபடுத்த அவ்விரு நிறுவனங்களும் ஆர்வம் காட்டியுள்ளன. மலேசியாவில் முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த 280 கோடி வெள்ளி நேரடி அந்நிய முதலீடுக்கான கடப்பாடு புலப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.

ஆசியான் நாடுகளுக்கு நுழையும் சரியான முதலீடுகளை ஈர்ப்பதில் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளுடன் புதிய வியூகத்துடன் அமைச்சு செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :