ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சபாவில் வெள்ளம்- ஜோகூர், பகாங்கில் நிலைமை சீரடைகிறது

கோலாலம்பூர், ஜன 15- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் சபா புதிதாக இணைந்துள்ளது. இம்மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள 29 துயர் துடைப்பு மையங்களில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் தங்க வைக்கப்படுள்ளனர்.

ஜோகூர் மற்றும் பகாங்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு மாநிலங்களிலும் இன்று காலை நிலவரப்படி 12 துயர் துடைப்பு மையங்களில் 617 பேர் தங்கியுள்ளனர். நேற்று மாலை இந்த எண்ணிக்கை 891 பேராக இருந்தது என அந்த அறிக்கை கூறியது.

ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஏழு துயர் துடைப்பு மையங்களில் 456 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மெர்சிங்கில் உள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில் 136 பேரும் கோத்தா திங்கியில் உள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 124 பேரும் சிகாமாட்டில் உள்ள ஒரு மையத்தில் 88 பேரும் குளுவாங்கிலுள்ள ஒரு மையத்தில் 85 பேரும் பத்து பகாட்டிலுள்ள ஒரு மையத்தில் 23 பேரும் அடைக்கலம் நாடியுள்ளனர்.

பகாங் மாநிலத்தில் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 143 பேராக இருந்து வருகிறது. ரொம்பின் மாவட்டத்தில் உள்ள இரு நிவாரண மையங்களில் 143 பேரும் பெக்கானிலுள்ள ஒரு மையத்தில் 18 பேரும் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இதனிடையே, ஜோகூர் பகாங், பேராக், பெர்லிஸ், கெடா, சிலாங்கூர், திரங்கானு ஆகிய மாநிலங்களிலுள்ள பல ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளதை வடிகால் மற்றும் நீர் பாசனத்துறையின் டெலிமெட்ரி நிலையம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பாலம் உடைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் உள்ள 46 சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக நட்மா கூறியது. 


Pengarang :