ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பொங்கல் பண்டிகை உறவுகளை ஒன்றிணைக்கிறது – டத்தோ ரமணன்

சுங்கை பூலோ, ஜன 16-  ஆலயங்களில் பக்தர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபடுவதை காண்கையில், நமது கலாச்சாரமும் பாரம்பரியமும் வலுவாக வேரூன்றியிருப்பதை உணர முடிகிறது என தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்ற நம் தமிழர் வாழ்வியல் முறைகள், அடுத்தடுத்து தலைமுறையினரிடம் தொடர்வதற்கான நன்முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுங்கை பூலோ ஆர்.ஆர்.ஐ.எம். தோட்டத்து ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 40 மகளிர் பொங்கல் வைத்தனர்.

200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற இவ் விழாவுக்குச் சிறப்புப் பிரமுகராக கலந்து கொண்ட சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஊர் மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும் என்பதை “ஊருடன் கூடி வாழ்” என ஆத்திசூடி வழி, 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் தமது நீதி நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதற்கு ஒப்பாக நமது பண்பாட்டு கூறுகளும் பண்டிகைகளும் அமையப்பெற்றுள்ளன. அவ்வழி, பொங்கல் பாண்டிகையையும் அண்டை அயலாருடன் ஒன்றிணைந்து ஆலயங்களில் கொண்டாடுவது, ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் எடுத்துக் காட்டுகிறது என டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இதனிடையே, பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், முதல் முறையாக வட்டார மக்களுடன் ஒன்றிணைந்து இந்த ஆலயத்தில் பொங்கல் வைப்பதாகவும், இது கடந்த காலங்களில் தாங்கள் தோட்டப்புறத்தில் கொண்டாடிய நினைவலைகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மற்றொரு நிலவரத்தில், ஆலயத்தில் பக்தர்களோடு ஒன்றிணைந்து பொங்கல் கொண்டாடுவதற்கு நல்லாதாரவு வழங்கிய டத்தோ ரமணனுக்கு ஆலயத் தலைவர் ராமகிருஷ்ணன் எல்லப்பன் நன்றி தெரிவித்துக் கொண்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் பெரிய அளவில் பொங்கல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு தாம் ஆவல் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Pengarang :