ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பத்துமலையில் மூதாட்டியின் சங்கிலி பறிப்பு- அந்நிய நாட்டுப் பெண் கைது

கோலாலம்பூர், ஜன 25- பத்து மலை தைப்பூச விழாவில் மூதாட்டி ஒருவரின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற அந்நிய நாட்டுப் பெண் ஒருவர் போலீசில் பிடிபட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.00 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் அரிபின் முகமது நாசீர் கூறினார்.

அறுபத்து நான்கு வயதான அந்த மூதாட்டி 17 மற்றும் 15 வயதுடைய தனது இரு பேரப்பிள்ளைகளுடன் ஆலயத்தின் அருகில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்து போது திடீரெனத் தோன்றிய மாது மூதாட்டியை கீழே தள்ளி சங்கிலியைப் பறிக்க முயன்றதாக அவர் சொன்னார்.

அம்மூதாட்டியின் கழுத்திலிருந்த சங்கிலியை அம்மாது பறிக்க முயல்வதைக் கண்ட பொது மக்கள் கூச்சலிட்டனர். அச்சங்கிலி பாதி அறுந்து தரையில் விழுந்த நிலையில் அம்மாது அங்கிருந்து தப்பியோட முயன்றார். எனினும், பொது மக்கள் அம்மாதுவை வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 393வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்காக 45 வயதுடைய அம்மாதுவை தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதி செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று பெறப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தைப்பூச விழாவில் கலந்து கொள்ள பத்துமலை திருத்தலம் வரும் பக்தர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் அதேவேளையில் தங்கள் உடமைகளைப் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :