ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்- பிரகாஷ் வலியுறுத்து

ஷா ஆலம், ஜன 26- கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைய காலமாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக தாமான் ஸ்ரீ மூடா, புக்கிட் கெமுனிங் 8வது மைல் மற்றும் புக்கிட் லஞ்சோங் உள்ளிட்ட பகுதிகள் வெள்ள பாதிப்புக்குள்ளாவதை கருத்தில் கொண்டு இவ்விவகாரத்திற்கு விரைவான தீர்வு காணப்படுவது அவசியம் என்று அவர் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பில் 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் வடிகால் நீர்பாசனத் துறையை தாம் பணித்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த தொகுதியில் வெள்ளத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ளும்படி மத்திய மற்றும் மாநில அரசுகளைத தாம் கேட்டுக் கொள்வதோடு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுடுத்தும்படியும் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும், இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் அரசு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது குறித்து அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றார் அவர்.

இங்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு 10 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக கூறிய பிரகாஷ், இம்மாதம் 24ஆம் தேதிக்குள் முற்றுப் பெற்றிருக்க வேண்டிய நீர் இறைப்பு பம்ப்களை  பொருத்தும் பணி எதிர்பாராத மண் நகர்வு பிரச்சினையினால் தாமதமடைந்துள்ளதாக சொன்னார்.

அந்த நீர் இறைப்பு பம்ப் அருகே துணை மின் நிலையத்தை அமைப்பதற்கு முன்னர் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் கூறினார்.


Pengarang :