ECONOMYMEDIA STATEMENTNATIONAL

முதலீட்டுத் திட்ட மோசடியில் சிக்கி உணவு விநியோகிப்பாளர் வெ.82,000 இழந்தார்

மலாக்கா, ஜன 28- இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்த உணவு விநியோகிப்பாளர் ஒருவர் தனது குடும்ப சேமிப்புத் தொகையான 82,000 வெள்ளியை இழந்தார்.

அந்நிய நாணய மாற்றும் முதலீடு தொடர்பான விளம்பரம் ஒன்றை சஹபாட் இன்வெஸ்ட் மாஸ்டர் பீனா எனும் டெலிகிராம் குழு வாயிலாக அறிந்த அந்த 25 வயது இளைஞர் இம்மாதம் 19ஆம் தேதி அத்திட்டத்தில் முதலீடு செய்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி அகமது ஜாமில் ராட்ஸி கூறினார்.

தேர்தெடுக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை பொறுத்து அதிகத் தொகையை அதாவது 300 வெள்ளி முதலீட்டின் வழி 5,000 வெள்ளி வரை வருமானம் ஈட்ட முடியும் என்று அந்த மோசடிக் கும்பல் ஆசை வார்த்தை கூறியுள்ளது.  அதோடு மட்டுமின்றி கிடைக்கும் வருமானத்தில் 60 விழுக்காடு முதலீட்டாளருக்கும் 40 விழுக்காடு நிறுவனத்திற்கும் என பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது என்றார் அவர்.

மேலும், இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு மூன்று முதல் ஆறு மணி நேரத்தில் வருமானத்தைப் பெற்று விடலாம் என்றும் அந்த இளைஞரிடம் கூறப்பட்டுள்ளது.

இந்த கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டத்தின் பால் ஈர்க்கப்பட்ட அந்த இளைஞர் தொடக்கத்தில் 20 வெள்ளியையும் அதன் பின் ஒன்பது  பரிவர்த்தனைகள் வாயிலாக பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்தியுள்ளார். தன்னுடைய மற்றும் தன் தந்தைக்குச் சொந்தமான மொத்தம் 82,000 வெள்ளியை அவ்விளைஞர் இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளார்.

லாபத் தொகையைப் பெறுவதற்கு மேலும் பணத்தை செலுத்தும்படி அக்கும்பல் வலியுறுத்தியதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர் இது குறித்து  நேற்று முன்தினம் இரவு போலீசில் புகார் செய்தார் என அகமது ஜாமில் சொன்னார். 

முதலீடு தொடர்பான விளம்பரங்களை எளிதில் நம்பிவிட வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார். இத்தகைய விளம்பரங்களின் நம்பகத்தன்மையைக் கண்டறிய    ccid.rmp.gov.my/semakmule.  எனும் அகப்பக்கத்தை நாடும்படியும் அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :