ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் ரக்பி சங்கத் தலைவராக கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் தேர்வு

பெட்டாலிங் ஜெயா, பிப் 3- சிலாங்கூர் மாநில ரக்பி சங்கத்தின் 2024-2026 தவணைக்கான தலைவராக கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் நியமிக்கப்படுள்ளார்.

இங்குள்ள கிறிஸ்டல் கிராவுன் ஹோட்டலில் இன்று நடைபெற்ற ரக்பி சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இந்த நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இப்பொதுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லிம், சிலாங்கூர் ரக்பி சங்கத்திற்கு பழைய பொற்காலத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த நியமனத்தை தாம் கருதுவதாகச் சொன்னார்.

இப்பொறுப்பை வழங்கியதற்காக சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு நான் நன்றி தெரிவித்துக்  கொள்கிறேன். பிரபலமாகும் நோக்கில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கிளப்பில் அல்லது சங்கத்தில் சேரும் குறுகிய நோக்கம் எனக்கு கிடையாது. மாறாக நான் ரக்பி விளையாட்டை உண்மையாகவே நேசிக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

புதிய செயல்குழுவினருடன் இணைந்து ரக்பி விளையாட்டிற்கு புத்துயிர் ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன் என்று அவர் மேலும் கூறினார்.

ரக்பி என்பது ஆஜானுபாகுவான ஆண்களைப் சம்பந்தப்படுத்திய விளையாட்டு என்பதால் இந்த நியமனம் உங்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்குமா என வினவப்பட்ட போது, ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற 2010-2024 காலக்கட்டத்தில் ரக்பி விளையாட்டாளராக இருந்த அனுபவம் தமக்குள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :