ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலம் விளையாட்டரங்கை இடிக்கும் பணி ஆறு மாதத்தில் முற்றுப் பெறும்

சபாக் பெர்ணம், பிப் 14- ஷா ஆலம் விளையாட்டரங்கை இடிக்கும் பணி வெடிமருந்தைப் பயன்படுத்தாமல் வழக்கமான நடைமுறையில் மேற்கொள்ளப்படும். இப்பணி ஆறு முதல் ஏழு மாத காலத்தில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கமான நடைமுறை கால தாமதத்தை ஏற்படுத்தினாலும் இந்த நடைமுறை பாதுகாப்பானது என்பதோடு ஷா ஆலம், செக்சன் 13 வட்டார மக்களுக்கு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் கூறினார்.

அரங்கை உடைக்கும் பணி மரபு ரீதியாக மேற்கொள்ளப்படுவதால் இப்பணி முற்றுப் பெறுவதற்கு ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை பிடிக்கும். சிறப்பான தீர்வை நாங்கள் சிந்திக்கிறோம். வெடிமருந்தைப் பயன்படுத்தினால் சில நிமிடங்களில் அரங்கை தரைமட்டமாக்கிவிட முடியும். எனினும், அதனால் பின்விளைவுகளும் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

முதல் கட்டமாக அரங்கை இடிக்க விரும்புகிறோம். இவ்வாண்டிற்குள் அப்பணி முற்றுப் பெற்றால் 2024 இறுதியில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என்று அவர் தெரிவித்தார்.

மூன்று கட்டங்களை உள்ளடக்கிய புதிய ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் கட்டுமானப் பணிகள் வரும் 2029ஆம் ஆண்டில்  முற்றுப் பெறும் என்று மந்திரி புசார் கழகம் (எம்.பி.ஐ.) முன்னதாகக் கூறியிருந்தது.

தற்போது தொடங்கப்பட்டுள்ள பழைய அரங்கை இடிக்கும் பணிகள் முற்றுப்பெற்றவுடன் வர்த்தக வளாகங்கள், கார் நிறுத்துமிடத் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய விளையாட்டரங்கை நிர்மாணிக்கும் பணி தொடங்கப்படும்.

வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள இரண்டாம் கட்டப் பணி உள்ளரங்கம், இளைஞர் மற்றும் விளையாட்டுப் பிரிவு மற்றும் பொழுது போக்கு பகுதிகளின் நிர்மாணிப்பை உள்ளடக்கியிருக்கும். 

வரும் 2028ஆம் ஆண்டு தொடங்கி 2029 டிசம்பர் வரை மேற்கொள்ளப்படவுள்ள மூன்றாம் கட்டப் பணியின் போது ஒருங்கிணைந்த முனையம் மற்றும் ஹோட்டல் ஆகியவை நிர்மாணிக்கப்படும்.


Pengarang :