ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இலகுரக விமான விபத்து- விமானிகளின் உடல்கள் 1.52 மீட்டர் ஆழத்தில் புதையுண்ட நிலையில் கண்டுபிடிப்பு

ஷா ஆலம், பிப் 14- காப்பார், கம்போங் தோக் மூடாவில் நேற்று விபத்துக்குள்ளான பி.கே.160 கேப்ரியல் ரக இலகு விமானத்தில் இருந்த இரு விமானிகளின் உடல்கள்  1.52 மீட்டர் ஆழத்தில் மண்ணில் புதையுண்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

அவ்விருவரின் உடல்களும் கோக்பிட் எனப்படும் விமானி அறையுடன் மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

முதலாவது நபரின் உடல் நேற்றிரவு 7.06 மணிக்கும் இரண்டாவது நபரின் உடல் 11 நிமிடங்களுக்குப் பின்னரும் மீட்கப்பட்டதாக அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்தார்.

அவ்விருவரின் உடல்களும் விமானியின் அறையில் இருந்ததை மீட்புப் பணியாளர்கள் கண்டனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.

வானிலிருந்து செங்குத்தாக விழுந்ததாக நம்பப்படும் அந்த விமானத்தின் சிதறிய பாகங்களை உள்ளடக்கிய 800 மீட்டர் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் வலைவீசித் தேடும் நடைமுறையைப் பயன்படுத்தி தேடுதல் பணிகளை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்தில் மனித உடல்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து கனரக வாகனங்களின் உதவியுடன் வழக்கமான நடைமுறையைப் பயன்படுத்தி தேடுதல் பணியை மேற்கொண்டனர் என்றார் அவர்.

இந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் தன்னார்வலர் தீயணைப்புத் துறையினர், பொது தற்காப்புப் படை (ஏ.பி.எம்.) ரேலா மற்றும் வட்டார  பொது மக்களும் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

விபத்துக்குள்ளான அந்த விமானத்தின் விமானி மற்றும் துணை விமானி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்களின் உடல்கள் சவப்பரிசோதனைக்காக கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

 


Pengarang :