ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டின் மக்கள் தொகை 3.37 கோடி பேர்- ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர், பிப் 14- கடந்த 2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் நாட்டின் மக்கள் தொகை 2 விழுக்காடு அதிகரித்து 3 கோடியே 37 லட்சம் பேராக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சம் பேராக இருந்தது.

நாட்டின் மொத்த மக்கள்  தொகையில் 3 கோடியே 50 லட்சம் பேர் மலேசியர்களாக உள்ள வேளையில் எஞ்சியோர் வெளிநாட்டினராவர் என்று மலேசிய புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸிர் மாஹிடின் கூறினார்.

ஆண்களின் எண்ணிக்கை 1 கோடியே 72 லட்சம் பேரிலிருந்து 1 கோடியே 77 லட்சம் பேராக உயர்ந்துள்ள வேளையில் பெண்களின் எண்ணிக்கை 1 கோடியே 58 லட்சம் பேரிலிருந்து 1 கோடியே 60 லட்சம் பேராக அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.

ஒட்டு மொத்த மக்கள் தொகையை பாலின விகிதாசாரத்தில் பார்த்தால் 110 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற எண்ணிக்கையில் உள்ளனர். அதே சமயம் நாட்டின் பிரஜைகளைப் பொறுத்த வரை 103 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற  எண்ணிக்கையில் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

சுழியம் முதல் 14 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கை 76 லட்சம் பேராக உள்ள வேளையில் 14 முதல் 64 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 36 லட்சம் பேராக உள்ளது. 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 25 லட்சம் பேராக உள்ளது என்றார் அவர்.

கடந்த 2022ஆம் ஆண்டு நான்காம் காலாண்டில் 114,067 ஆக இருந்த பிறப்பு விகிதம் கடந்தாண்டு அதே காலக்கட்டத்தில் 1.1 விழுக்காடு குறைந்து 112,767 ஆக ஆனது.

சிலாங்கூரில் மிக அதிகமாக அதாவது 20,931 குழந்தைகள் பிறந்த வேளையில் கூட்டரசு பிரதேசத்தில் மிகவும் குறைவாக 385 குழந்தைகள் பிறந்தன.

கடந்தாண்டின் மூன்றாம் காலாண்டில் நாடு முழுவதும் 48,250 மரணச் சம்பவங்கள் பதிவாகின. இது கடந்த 2022ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தை 4.2 விழுக்காடு குறைவானதாகும்.


Pengarang :