ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ரிங்கிட் தேய்மானத்தால் வெளிநாட்டு மருந்துகளின் கொள்முதலில் பாதிப்பு   அதிகமில்லை- அமைச்சர்

தஞ்சோங் கராங், பிப். 24 – மலேசிய ரிங்கிட்டின் தற்போதைய தேய்மானம் வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை வாங்குவதை மிகக் குறைவாகவே பாதித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அகமது கூறினார்.
ஏனெனில், அதிக விலைக்கு மருந்து கொள்முதல் செய்வதைத் தவிர்க்க, ஹெட்ஜிங் முறைகளை அமைச்சகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
“எந்தவொரு கொள்முதலிலும், நாங்கள் ஹெட்ஜிங் உத்தியை செயல்படுத்தினோம், அதாவது ஏற்ற இறக்கமான நாணயங்களால் பாதிக்கப்படாமல் இருக்க முன்கூட்டியே கொள்முதல் செய்தோம்.
“எனவே நாங்கள் வாங்கி சீக்கிரமே ‘லாக் இன்’ செய்கிறோம். “அதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களில் நமது நாணயத்தின் மதிப்பு சிறிது குறைந்தாலும், உண்மையான (வெளிநாட்டில் இருந்து மருந்துகளை வாங்குவது) நாம் ‘லாக் இன்’ செய்த விலையில் செலுத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
தஞ்சோங் கராங் பல் மருத்துவமனை கட்டுமானத் திட்டம் இன்று சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சூல்கிப்ளி அகமது  இவ்வாறு கூறினார்.
தற்போதைய குறைந்த மாற்று விகிதங்கள் மருத்துவ சுற்றுலாத் துறையையும் சாதகமாக பாதிக்கின்றன, ஏனெனில் வெளிநாட்டிலிருந்து அதிகமான நோயாளிகள் நாட்டில் சுகாதார சிகிச்சையைப் பெறுவார்கள்.
முன்னதாக, டாக்டர்  சூல்கிப்ளி தனது   உரையில், தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு அடுத்துள்ள 1.21 ஹெக்டேர் நிலப்பரப்பில் RM13 மில்லியன் தஞ்சோங் காராங் பல் மருத்துவ மனையின் கட்டுமானப் பணிகள் ஜூன் 15, 2020 அன்று தொடங்கி, கடந்த ஆண்டு டிசம்பரில்  நிறைவடைந்ததாகக் கூறினார்.
“இந்தப் புதிய கட்டிடத்தில் முதன்மை பல் மருத்துவ மனை, ஆர்த்தோடோன்டிக் நிபுணர் பிரிவு மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட பல் சுகாதார அலுவலகம் உள்ளது.
” இந்த பல் கிளினிக் மார்ச் 4-ம் தேதி செயல் படவுள்ளது, இந்த கிளினிக்கில் எட்டு பல் நாற்காலிகள், அதாவது ஐந்து முதன்மை பல் நாற்காலிகள் மற்றும் ஆர்த்தோடோன்டிக் பிரிவுக்கான மூன்று பல் நாற்காலிகள், அத்துடன் உள்முக எக்ஸ்ரே அறை மற்றும் பல் செயற்கை உறுப்புகளை தயாரிப்பதற்கான பல் ஆய்வகம் ஆகியவை பொருத்தப் பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

Pengarang :