ECONOMYNATIONAL

அடுத்தாண்டு 20 லட்சம் சுற்றுப் பயணிகளை  ஈர்க்க டூரிசம்  சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், மார்ச் 10- அடுத்தாண்டு அனுசரிக்கப்பட விருக்கும்  சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டை முன்னிட்டு  இருபது லட்சம் அனைத்துலகச் சுற்றுலாப் பயணிகளை  ஈர்ப்பதில்  டூரிசம் சிலாங்கூர்  ஆர்வம் கொண்டுள்ளது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

குடும்பத்துடன் அல்லது வணிக நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து சிலாங்கூர் வரும்  சுற்றுப்பயணிகள் பொதுவாக எட்டு முதல் ஒன்பது நாட்கள் வரை இங்கு தங்கியிருப்பார்கள் என்று அஸ்ருள் ஷா முகமது கூறினார்.

கோல லங்காட்டில் உள்ள மா மேரி கலாச்சாரம், கோல சிலாங்கூரில் கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சிகள் சரணாலயம்,  விங்ஸ் ஆஃப் கோல குபு பாரு மற்றும் உலு சிலாங்கூரில் மலை சைக்கிள் தடம் போன்றவை அவர்களைக் கவரும் சுற்றுலாத் தலங்களாகவும் என அவர் சொன்னார்.

இந்த சுற்றுலா ஈர்ப்பு நடவடிக்கையில் சூழியல்  சுற்றுலா, காஸ்ட்ரோனமி (உணவு சுற்றுலா), தீம் பார்க் எனப்படும் பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் ஓய்வு விடுதிகளின் பிரிவில் கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 94,264 ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் சிலாங்கூருக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில்  20,639 பேர் இங்கிலாந்தையும்  10,819 பேர் ஜெர்மனியையும் சேர்ந்தவர்களாவர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கடந்த மார்ச் 3 முதல் 8 வரை பெர்லினில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான இண்டர்நேஷனல் டூரியஸ் போர்ஸ்ஸில் டூரிசம் சிலாங்கூரும்   பங்கேற்றதாக அஸ்ருல் தெரிவித்தார்.

ஆறாவது முறையாக நடைபெற்ற  இந்நிகழ்வில்  பங்கேற்றதன் வழி  செக் குடியரசு, எஸ்டோனியா மற்றும் டிஸ்கோவா மற்றும் உலகளாவிய பயண   நிறுவனத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு வழிவகுத்தது என்றார் அவர்.


Pengarang :