ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மறுசுழற்சி தொழிற்சாலையில் 48  கள்ளக் குடியேறிகள் கைது- வெ.688,000 பறிமுதல்

புத்ராஜெயா, மார்ச் 21 – கிள்ளான் வட்டாரத்திலுள்ள  உள்ள மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்றில் நேற்று முன்தினம் குடிநுழைவுத்துறை  நடத்திய சோதனையில் 16 முதல் 78 வயதுக்குட்பட்ட   48 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

இச் சோதனையின் போது தொழிற்சாலையின் இயக்குநரான 50 வயதுடைய உள்நாட்டு நபரும் கைது செய்யப் பட்டதோடு  688,000 வெள்ளி ரொக்கம், நான்கு கைப்பேசிகள், 8 கடவுச்சீட்டுகள், நிறுவன ஆவணங்கள், பதிவுகள் மற்றும் உரிமங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர்  டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்ட  அந்நிய நாட்டினர் செல்லுபடியாகும் பயண பத்திரங்கள் மற்றும் வேலை அனுமதிச் சீட்டுகளை கொண்டிராதது ஆகிய  இரண்டு குற்றங்களைப் புரிந்திருப்பது கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில் சீன நாட்டவரான நிறுவனத்தின் உரிமையாளர் குடிநுழைவுச் சட்டத்தின்  55(பி) பிரிவின் கீழ் கள்ளக் குடியேறிகளை சட்டத்திற்கு  புறம்பான முறையில் வேலைக்கு அமர்த்தியுள்ளார் என நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்

இந்த சோதனையின் போது அதிக அளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை நடவடிக்கையின் போது  தொழிலாளர்களுக்கு  சம்பளம் வழங்கும் பணியில்  அந்நிறுவனம் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் விசாரணையின் போது இத்தகவல்கள் சரிபார்க்கப்படும் என்று அவர் கூறினார்.

இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் தங்குமிட வசதியுடன்  தொழிலாளர்களுக்கு மாதம் 2,000 முதல் 3,000 வெள்ளி வரை ஊதியம் வழங்கப்படுவது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது நஎன்று அவர் தெரிவித்தார்.

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம்,  1966ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகள்,  2007ஆம் ஆண்டு ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Pengarang :