ECONOMYMEDIA STATEMENTNATIONAL

100 மில்லியனை முழுமையாக பயன் படுத்தினால் அடுத்த ஆண்டு கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பு உண்டு  டத்தோ ரமணன் தகவல்

செய்தி ; சு.சுப்பையா

கெர்லிங்.மே.3-  இந்தியச் சமுதாய மேம்பாட்டுக்கு ஆண்டுதோறும் அரசு ரி.ம. 100 மில்லியன் ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்தியச் சமுதாயத்துக்கு காலம் காலமாக வெறும் 100 மில்லியன் மட்டும் தான என்று எதிர்க் கட்சியில் உள்ள இந்தியர்கள் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

முறையாக வழங்கப்பட்ட அனைத்து நிதியையும் நாம் பயன்படுத்தினால்  அடுத்த ஆண்டு கூடுதல் நிதி இந்தியச் சமுதாயத்தின் சார்பில் கேட்க முடியும் என்று தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியச் சமுதாய உருமாற்றுத் திட்டம் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இத்திட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் மித்ரா என்று உருமாற்றம் பெற்றது.  சீட் மற்றும் மித்ரா என்ற பெயரில் 100 மில்லியன் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் பல ஆண்டுகளாக முறையாக இந்த நிதி பயன்படுத்தப்படவில்லை.

ஆண்டுதோறும் பெரிய தொகை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டில் தான் முதன் முறையாக எனது தலைமையில் ரி.ம. 100 மில்லியன் பயன்படுத்த பட்டது. இதற்கு முன் அப்படி நடக்கவில்லை. இந்த ஆண்டும் முறையாக 100 மில்லியன் ரிங்கிட்டும் பயன்படுத்த பட்டால் அடுத்த ஆண்டு இந்தியச் சமுதாயத்துக்கு கூடுதல் நிதியை கோர முடியும்.

ஆனால் இதனைத் தெரிந்து கொள்ளாமல் ஒரு சில தரப்பினர் ஆண்டுதோறும் இந்தியச் சமுதாயத்துக்கு 100 மில்லியன் மட்டும் தானா என்று அரசு மீது கால் புணர்ச்சியுடன் பரப்புரை செய்து வருகின்றனர்.

நாம் இந்திய சமுதாய உருமாற்றத்திற்கான அனைத்து நிதியையும் செலவிட்டால் கண்டிப்பாக இனி வரும் காலங்களில் கூடுதல் நிதி கிடைக்கும் என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மித்ரா நிதியிலிருந்து 10,000 இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க  நிதியுதவி செய்துள்ளோம். மேலும் நாட்டில் உள்ள எல்லாத் தமிழ்ப் பள்ளிகளும் கணினி வகுப்பு நடத்த 6,000 மடிக் கணினிகள் வழங்கப் பட்டன. இது தான் வரலாற்றில் முதன் முறையாக எல்லாத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஏக காலத்தில் மடிக்கணினி கொடுக்கப் பட்டது. இந்தியச் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக மடாணி அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இந்த ஆட்சி நிலையாக இருக்க வேண்டுமானால் இந்தியர்கள் தொடர்ந்து மடாணி அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

நேற்று கெர்லிங் பொது மண்டபத்தில் கோலக் குபு பாரு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டம் , இங்குள்ள பொது மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தின் ஸ்ரீ டாக்டர் வான் அசிசா தலைமை தாங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு பி.கே.ஆர் மற்றும் ஜ.செ.க.வின் இந்தியத் தலைவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். குறைந்தது 200க்கும் மேற்பட்ட இந்தியப் பெண்கள் திரண்டு வந்திருந்தனர். அனைவரும் இந்த இடைத் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இறுதியாக கோல குபு பாரு பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் பாங்  மண்டபத்துக்கு வந்து வாக்கு வேட்டையாடினார்.


Pengarang :