ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசிய-சீன உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது- துணைப் பிரதமர் கூறுகிறார்

ஹாங்காங், மே 24- மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான 50 ஆண்டுகால வலுவான உறவு  மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கு அரசாங்கம்,  வணிகத்திற்கு வணிகம் மற்றும் மக்களுக்கு மக்கள் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் வலுவான  தொடர்புகள் இதற்கு சான்றாகும் என்று கிராம மற்றும்  வட்டார மேம்பாட்டுத் துறை அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

மேலும், மலேசியா வரும்  சீன சுற்றுப் பயணிகளுக்கு 30 நாள் விசா இல்லாத நுழைவு அனுமதி மற்றும் சீனா செல்லும் மலேசிய சுற்றுப் பயணிகளுக்கு 15 நாள் விசா இல்லாத நுழைவு அனுமதி  ஆகியவையும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  துணைப் பிரதமராகப்  பதவியேற்ற அகமது  ஜாஹிட் தற்போது சீனாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். சீன துணையதிபர் டிக் ஷூவா ஷிங்கின் அழைப்பின் பேரில் கடந்த  செவ்வாய்க்கிழமை தொடங்கிய அவரது இந்த  11 நாள் பயணத்தில்  ஹாங்காங் முதல் நகரமாக அமைந்துள்ளது.

சீனத்  தலைவர்களுடனான எனது உறவு மிகவும் நெருக்கமானது. மேலும் நான் 1990 களில் இருந்து ஒரு வர்த்தக உறுப்பினராக சீனாவுடன் ஈடுபட்டுள்ளேன். மேலும் இப்போது நான் அரசாங்கத்தை பிரதிநிதிக்கிறேன்  என்று அவர்  மலேசிய ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும்  சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீனப் பிரதமர் லீ கியாங் ஆகியோருக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதும் தனது சீனப் பயணத்தின் நோக்கமாகும் என்றார் அவர்.

தனது இந்தப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி  (திவேட்), ஹலால் தொழில் மற்றும் வர்த்தகம் உட்பட பல விஷயங்கள்  கலந்துரையாடப்படும் என்றார்.

ஷாங்காயில்  பல ஒப்பந்தங்கள் (திவேட் தொடர்பானது) கையெழுத்திடப்படுவதை நான் காண்பேன். மேலும்  பெய்ஜிங்கில் நடைபெறும்  மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 50-வது ஆண்டு விழாவில் நான் அதிகாரப்பூர்வமாக கலந்து கொள்வேன் என்று அவர் கூறினார்.

மலேசியாவும் சீனாவும் கடந்த  1974 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இருதரப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.


Pengarang :