ECONOMYMEDIA STATEMENT

11,713 எஸ்.பி.எம். மாணவர்கள் ‘ஏ’ நிலையில் தேர்ச்சி-  93.5 விழுக்காட்டினர் சான்றிதழ் பெறத் தகுதி

புத்ராஜெயா, மே 27-  கடந்த 2023ஆம் ஆண்டு  எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் மொத்தம் 11,713 மாணவர்கள்  அனைத்துப் பாடங்களிலும் ஏ+, ஏ மற்றும் ஏ- மதிப்பெண்களுடன்  சிறப்புத் தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம். தேர்வில் மாணவர்களின் தேசிய சராசரி மதிப்பெண் விகிதம்  (ஜி.பி.என்.)  4.60 ஆகப் பதிவாகியுள்ளதாக கல்வித் துறை தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் கூறினார்.

அதற்கு முந்தைய  ஆண்டு ஜி.பி.என். விகிதம் 4.74ஆக இருந்தது.  குறைவான ஜி.பி.என். மதிப்பு மாணவர்களின் சிறப்பான அடைவு நிலையை பிரதிபலிக்கிறது.

கடந்தாண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 373,255 மாணவர்களில் 226,358 பேர் குறைந்தது அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த  2022ஆம் தேர்வினை எழுதிய  213,624 மாணவர்களில் 57.1 விழுக்காட்டினர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிப் பெற்றனர்.

மொத்தம் 93.5 விழுக்காட்டு மாணவர்கள் அல்லது  349,297
பேர்  2023ஆம் ஆண்டு  எஸ்.பி.எம். தேர்வுச் சான்றிதழைப் பெறும் தகுதியைப் பெற்றுள்ளனர். கடந்த 2022இல் இந்த எண்ணிக்கை 342, 742 பேராகும் என்று இன்று இங்கு தேர்வு முடிவுகளை அறிவிக்கும் நிகழ்வில் அஸ்மான் கூறினார்.


Pengarang :