ECONOMYMEDIA STATEMENT

சுங்கை காண்டீஸ் ஆற்றில் நீல நிறமாக மாறிய நீர்- லுவாஸ் விசாரணை 

ஷா ஆலம், ஜூன் 2- இங்குள்ள சுங்கை காண்டீஸ் ஆற்றில் நீர் நீல நிறமாக மாறியது தொடர்பில் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

ஜாலான் ஒம்போவில் உள்ள உள்ள தொழில்பேட்டைப் பகுதியிலிருந்து வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நீல வர்ணம் சாயம் இந்த மாசுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என அந்த வாரியம் தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நீல நிறத்தினலான நீர் திட்டு திட்டாக க் காணப்பட்டது. அந்த நீர் கால்வாய் வழியாக ஆற்றில் கலந்தது.

அடுத்தக் கட்ட அமலாக்க நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட பகுதியிலிருந்து நீரின் மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்காக இசாயன இலாகாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அது தெரிவித்தது.

நீர் வளத்திற்கு மாசுபாடு ஏற்படுத்தியதற்காக 1999ஆம் ஆண்டு லுவாஸ் சட்டத்தின் 79(1)(சி) பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது என்று லுவாஸ் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது அமலாக்க நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இவ்விவகாரத்தை சுற்றுச்சூழல் இலாகா மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் கவனத்திற்கு லுவாஸ் கொண்டுச் சென்றுள்ளது.

நீர் வளங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் அல்லது மாசுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்றும் அந்த வாரியம் திட்டவட்டமாக கூறியது.


Pengarang :