ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை காண்டீஸ் ஆற்றில் கலந்த நீல நிறக் கழிவு அருகிலுள்ள தொழிற்சாலைகளைச் சேர்ந்தது அல்ல

ஷா ஆலம், ஜூன் 3 – சுங்கை காண்டிஸ் ஆற்றில்  காணப்படும் நீல நிற மாசுபாடு இங்குள்ள செக்சன்  34, புக்கிட் கெமுனிங் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளைச் சேர்ந்தது அல்ல.

இந்த வர்ணக் கழிவு  வேறு இடத்திலிருந்து இங்கு கொண்டு வரப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று சுற்றுச் சூழல் துறைக்கான  ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

அதிகாரிகளால் கண்டறியப் படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை இரவில் நடந்திருக்கலாம் என்பதை ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன என்று அவர் சொன்னார்.

செக்சன்  34 தொழில் பேட்டையில்  உள்ள தொழிற்சாலைகள்  உலோக அடிப்படையிலான வேலைகள், வெல்டிங், கிடங்கு மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன. இந்த  சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இத்தகைய  கழிவுகளை உற்பத்தி செய்யவில்லை என அவர் தெரிவித்தார்.

​​சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையின் புலனாய்வுக் குழு நடத்திய சோதனையில்  இந்த நீல நிற மாசுபாடு சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை  பரவியுள்ளது கண்டறியப்பட்டதோடு  நீல நிற திரவம் புதர் நிறைந்த பகுதியில் கண்டறியப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடயங்களின்படி பொறுப்பற்ற தரப்பினர் வேறு எங்கிருந்தோ நீல நிற திரவத்தை கொண்டு வந்து அப்பகுதியில் கொட்டியிருக்கலாம் என்று அவர்  தெரிவித்தார்.


Pengarang :