ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இஸ்ரேலின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஜோ பைடனின் பரிந்துரைக்கு மலேசியா ஆதரவு

புத்ராஜெயா, ஜூன் 4- காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டும் விதமாக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வைத்துள்ள பரிந்துரையை சம்பந்தப்பட்டத் தரப்பினர் ஏற்று அதனை அமல்படுத்த வேண்டும் என்று மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது.

காஸாவில் நிகழ்ந்த வரும் கோரத் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வருவதிலும் பாலஸ்தீனப் பிரதேசத்திலிருந்து இஸ்ரேலிய படைகள் முற்றாக வாபஸ் வாங்குவதிலும் இந்த பரிந்துரை சிறந்த வழியாக விளங்குகிறது என்று வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில்  கூறியது.

பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கும் காஸா நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் ஏதுவாக நிரந்தரமான  மற்றும் ஆக்ககரமான போர் நிறுத்தம் அவசியம் என மலேசியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் முழுமையான போர் நிறுத்தம், இரு தரப்பின் வசமிருக்கும் பிணைக் கைதிகள் விடுவிப்பது, போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கான முன்னெடுப்பு மற்றும் பாலஸ்தீன மறுநிர்மாணிப்புக்கான விரிவான திட்டம் ஆகியவற்றை முன்னிறுத்தி ஜோ பைடன் வெளியிட்டுள்ள மூன்று கட்ட பரிந்துரை ஒரு சரியான நடவடிக்கையாகும் என்று அமைச்சு தெரிவித்தது.

பாலஸ்தீனர்களுக்கு பிளவுபடாத மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் காஸாவின் மறுநிர்மாணிப்புக்கும் அனைத்துலக சமூக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மலேசியா கேட்டுக் கொண்டது.

1967ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாக க் கொண்ட சுய தீர்மான உரிமை, சுதந்திரம் மற்றும் முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை உருவாக்குவது உள்பட பாலஸ்தீன மக்களுக்கான உறுதியான மற்றும் பிளவுபடாத ஆதரவை மலேசியா தொடர்ந்து வலியுறுத்த விரும்புகிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.


Pengarang :