ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஃபைசால்  ஹலிம் மீதான தாக்குதலைக் கண்டித்து அவசரத் தீர்மானம்- சட்டமன்றத்தில் நிறைவேற்றம்

ஷா ஆலம், ஜூலை 6- கால்பந்து விளையாட்டாளர் ஃபைசால் ஹலிமுக்கு எதிராக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட எரிதிராவகத் தாக்குதலைக் கண்டிக்கும் அவசரத் தீர்மானம் சிலாங்கூர் சட்டமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அண்மைய மாதங்களாக வன்முறைத் தாக்குதல்களை எதிர்நோக்கி வரும் ஃபைசால் மற்றும் இதர கால்பந்து விளையாட்டாளர்களுக்கு ஆதரவைப் புலப்படுத்தும் நோக்கிலான இந்த தீர்மானத்தை ஸ்ரீ செர்டாங் உறுப்பினர் அப்பாஸ் சலிமி சே அட்ஸ்மி அவையில் முன்மொழிந்தார். இந்த தீர்மானம் மீதான விவாத்தில் அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்த நிலையில் இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றிய இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, சில ஆதரவாளர்களின் தீவிரப் போக்கு காரணமாக ஒற்றுமையை வளர்க்க வேண்டிய விளையாட்டு பிரிவினைக்கு வித்திடுகிறது என்று கூறினார்.

விளையாட்டுகள் குறிப்பாக, கால்பந்து அரசியல் மற்றும் மாநில எல்லைகளைக் கடந்து ஒற்றுமை வளர்க்கும் சக்தியாக விளங்கி வந்தது. ஆனால், தற்போது நடப்பது அதற்கு நேர்மாறாக உள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த தாக்குதலுக்கு எதிரான கண்டனத்தை வலியுறுத்திப் பேசிய நஜ்வான், விளையாட்டாளர்களை பாதுகாப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அதே சமயம் இவ்விவகாரத்தில் காவல்துறையிடமிருந்து முழுமையாக தகவல்கள் கிடைக்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்த அவர், அவர்கள் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் அல்லது விசாரணையின் சமீபத்திய நிலவரங்களை வெளியிட வேண்டும் என்றார்.


Pengarang :