ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சீனாவுக்கான டுரியான் ஏற்றுமதி உள்நாட்டுச் சந்தையைப் பாதிக்காது- ஃபாமா கூறுகிறது

மலாக்கா, ஜூலை 6- வரும் செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும்  சீனாவுக்கான முதல் டுரியான் ஏற்றுமதி  உள்ளூர் சந்தையில் அப்பழங்களின் விநியோகம்  மற்றும்  விலையைப் பாதிக்காது.

சீன நாட்டுச்  சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுவது மூசாங் கிங், ஐ.ஓ.ஐ. அல்லது டூரி ஹீத்தாம் போன்ற படியாக்கம் செய்யப்பட்ட  பிரீமியம் வகை டுரியான்களே என்று கூட்டரசு வேளாண் சந்தை வாரியத்தின் (ஃபாமா)  தலைமை இயக்குநர்   அப்துல் ரஷிட் பாஹ்ரி கூறினார்.

உள்ளூரில் டுரியானின் விலை  உயர்ந்ததாக இருக்காது என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். ஏனெனில் உள்ளூர் சந்தைக்கு  டுரியான் கம்போங்  உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள்  இன்னும் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பழ  சீசன் மிகவும் நீளமானது. அதாவது வரும் செப்டம்பர் வரை  உற்பத்தி   இருக்கும் என்று நாங்கள் எதிர் பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.

எனவே உள்ளூர் சந்தையில் மலிவான விலையில் டுரியான் தொடர்ந்து  கிடைக்கும். இருப்பினும்  டுரியான் விற்பனையாளர்கள் ஏற்க வேண்டிய செலவுகள் இருப்பதால் சிறிது விலை அதிகரிக்கலாம்  என்றார் அவர்.

இன்று இங்கு நடைபெற்ற கென்டுரியான் @ ஜுவாலான் அக்ரோ மடாணி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைக்  கூறினார்.

டுரியான் கையிருப்பு மற்றும் தேவையைப் பொறுத்து வான்வழி அல்லது கடல் வழியாக  சீனாவிற்கு புதிய டுரியான்களை ஏற்றுமதி செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

கப்பலைப் பயன்படுத்தினால் விநியோகம் சுமார் 10 அல்லது 20 மெட்ரிக் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடுகிறோம்.  அதே நேரத்தில் விமானப் போக்குவரத்து மிகவும் வரம்பிற்குட்பட்டதாக உள்ளது. நாங்கள் ஒரு மெட்ரிக் டன் அல்லது 5,000 பழங்களை எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.


Pengarang :