ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகத்தை நிராகரிப்பீர்- பொது, இளைஞர் அமைப்புகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

ஈப்போ, ஜூலை 8- ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் அடக்குமுறையை நிராகரிக்கும்படி இந்நாட்டிலுள்ள அரசு சாரா இயக்கங்கள் (என்.ஜ.ஒ.) மற்றும் இளைஞர் அமைப்புகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நபிகள் நாயகம் அவர்கள் வலுவான சமய நம்பிக்கை,  மற்றும் உயர் நெறிகள்   மூலம் ஊழல் மற்றும் அடக்குமுறையை சமூகத்திலிருந்து  ஒழித்து நீதியை நிலை நாட்டியதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் இத்தகைய குணநலன்களைக் கொண்டவர்களாகவும்  ஹிஜ்ராவின் (புலம் பெயர்தல்) உண்மையான பொருளை உணர்ந்தவர்களாகவும் தங்கள் கௌரவத்தை உயர்த்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்பவர்களாகவும் இருந்தால் நாடு முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல முடியும் என்று அவர் சொன்னார்.

ஹிஜ்ரா என்பது காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள், அநீதியான, அடக்குமுறை மற்றும் அவதூறான  செயல்களைத் துடைத்தொழிப்பதைக் குறிக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே நாம் மாற முடியும். நாட்டையும் மக்களையும் காப்பாற்றக் கூடிய இந்த உணர்வுகளை லீமா ஜெனராசி மலேசியா (பி.எல்.ஜி.) அமைப்பு கொண்டிருக்கும் என நான் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

நான் பழைய தலைமுறைக்குச் சொந்தமானவனாக இருக்கிறேன். ஆனால், நமது உரிமைகள் மற்றும் இறையாண்மையைக் காப்பதாக இருந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். உங்களால் முடிந்த அளவுக்கு என்னை இழிவுபடுத்தலாம், மட்டந்தட்டலாம், என்னை சிறையில் அடைக்கலாம். ஆனால் நான் பொங்கியெழுந்து போராட்டம் நடத்துவேன் என்றார் அவர்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற பி.எல்.ஜி. அமைப்பின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பேராக் மந்திரி  புசார் டத்தோஸ்ரீ சாரானி முகமது, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணையமைச்சர் ஆடாம் அட்லி அப்துல் ஹலிம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Pengarang :