ECONOMYMEDIA STATEMENT

அடுத்தாண்டு சிலாங்கூரில் முழுமையாக 5ஜி அலைக்கற்றை சேவை- மாநில அரசு திட்டம்

சுபாங் ஜெயா, ஜூலை 8- ஆடுத்தாண்டுவாக்கில் 5ஜி அலைக்கற்றைச் சேவையின்  ஆற்றல் எல்லையை (கவரேஜ்)  சிலாங்கூரில் முழுமையாக கொண்டிருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது 5ஜி அலைக்கற்றைச் சேவை மாநிலத்தில் 96.1 விழுக்காட்டை எட்டியுள்ள நிலையில் உயர் பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்ட பகுதிகளில் கட்டமைப்பு உருவாக்கம் மீது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக புத்தாக்கத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமது பாஹ்மி ங்கா கூறினார்.

சிலாங்கூர் மாநிலம் அடுத்தாண்டில் முழுமையான 5ஜி சேவையைக் கொண்டிருக்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை 38 இடங்களில் அழைப்பு வீழ்ச்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கான சரியான தடத்தில் சிலாங்கூர் பயணிக்கிறது. எதிர்காலத்தில் நெட்வோர்க் சேவையின் தரத்தை உயர்த்துவதற்கு ஏதுவாக பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

கிளானா ஜெயா, டி‘கிளானா மண்டப கார் நிறுத்துமிடத்தில் நேற்று நடைபெற்ற ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

அடுத்தாண்டு 5ஜி அலைக்கற்றையின் ஆற்றல் எல்லை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டப் பின்னர் புதிய வாய்ப்புகளைக் கண்டறிவதற்கான சாத்தியங்களை மாநில அரசு தற்போது ஆராய்ந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

5ஜி அலைக்கற்றைச் சேவை சிலாங்கூர் முழுமைக்கும் விரிபடுத்தப்பட்டால் அரசின் சேவைத் திறனை மேம்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்பதோடு மக்களுக்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க இயலும் என அவர் சொன்னார்.

ஆகவே. 5ஜி அலைக்கற்றைச் சேவையை  பெற்ற தொழில்பேட்டைப் பகுதிகளை நாங்கள் மறுஆய்வு செய்து வருகிறோம். இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குறிப்பாக வாகனத் தயாரிப்பு மற்றும் ரோபோட்டிக் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றார் அவர்.


Pengarang :