ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு- அறுவர் பலி, நால்வர் காயம்- 26 பேரைத் தேடும் பணி தீவிரம்

ஜாகர்த்தா, ஜூலை 8- இந்தோனேசியாவில் உள்ள தங்கச்சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் அறுவர் பலியான வேளையில் மேலும் நால்வர் காயமடைந்தனர். சுலாவேசி தீவின் வட பகுதியில் உள்ள கோரான்தாலோ பிரதேசத்தின் போனோ பொலங்கோ மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்த இந்த பேரிடரில் மேலும் 26 பேர் காணாமல்  போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மீட்புப் பணியாளர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்தை அடைவதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

சவால் நிறைந்த பூமியின் அமைப்பு, தொடர்ந்து பெய்து வரும் அடை மழை மற்றும் வெகு தொலைவில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட இடம் ஆகியவை தேடி மீட்கும் பணியை மிகவும் சிரமமானதாக ஆக்கியுள்ளதாக பஸார்னாஸ் எனப்படும் மீட்பு குழுவின் தலைவர் ஹெரியாந்தோ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலச்சரிவில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததோடு சில வீடுகளும் சேதமடைந்ததாக இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் பேச்சாளரான அப்துல் முஹாரி அறிக்கை ஒன்றில் கூறினார்.

கடுமையான மழையின் காரணமாக அந்த பிராந்தியத்தில் உள்ள ஐந்து இடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து அணைகளும் உடைந்துள்ளன என்று அவர் சொன்னார்.

அந்த பிராந்தியத்தில் உள்ள 288 வீடுகள் வெள்ளம் மற்றும் சகதியில் மூழ்கியுள்ளன. இந்த பேரிடரில் அப்பகுதியிலுள்ள 1,029 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் மிதமான மற்றும் கடுமையான மழை பெய்யும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.n


Pengarang :