ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிங்காஸ் திட்டத்திற்கு நிபந்தனை தளர்வு- அதிகமான ஏழைகள் பயன்பெற வாய்ப்பு

சிப்பாங், ஜூலை 8- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்ட விண்ணப்பத்திற்கான நிபந்தனை தளர்வு, நடப்பு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் தரப்பினர் மீது மாநில அரசு  கொண்டுள்ள  பரிவைக் காட்டுகிறது.

அதிக குடும்ப  உறுப்பினர்கள் உள்பட மாதாந்திர செலவினத்தை சமாளிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் தரப்பினரின் சுமையைக் குறைப்பதில் ஆண்டுக்கு 3,600 வெள்ளியை உதவித் தொகையாக வழங்கும் இந்த பிங்காஸ் திட்டம் ஓரளவு துணை புரியும் என்று குடும்ப மாதான சித்தி ஹமிடா முகமது ஹசான் (வயது 59) கூறினார்.

தற்போதைய வாழ்க்கை மிகவும் கடுமையானதாக உள்ளது. பள்ளி செல்லும் பிள்ளைகளையும் பராமரிப்பாளரின் பொறுப்பில் விட வேண்டிய குழந்தைகளையும் வேலையிடத்திற்குச் செல்வதற்கு ஏற்படும் பெட்ரோல் செலவுகளையும் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ள மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் தரப்பினருக்கு இந்த பிங்காஸ் திட்டம் பெரிதும் பயனுள்ளதாக விளங்கும் என அவர் சொன்னார்.

நானும் மாற்றுத் திறனாளி  பிள்ளையைக் கொண்டிருக்கிறேன். செலவினங்களை கவனிப்பதிலும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதிலும் இந்த பிங்காஸ் நிதி எனது சுமையை ஓரளவு குறைக்கிறது என்றார் அவர்.

நேற்று, இங்குள்ள டெங்கில் சமூக மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, நிரந்தர வருமானமின்றி கிராமத்தில் கூலித் தொழிலை செய்து வரும் குடும்பத் தலைவர்களுக்கு இந்த இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பின் கீழ் வழங்கப்படும் உதவிகள் பெரிதும் உதவியாக இருந்து வருவதாக சம்சுடின் முயேன் (வயது 61) தெரிவித்தார்.

இந்த திட்டம் குறைந்த வருமானம் பெறும் கிராம மக்களின் சுமையை குறைக்கிறது. மக்களின் நலனில் அக்கறை காட்டி வரும் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.


Pengarang :