ECONOMYMEDIA STATEMENT

பேரங்காடியில் கார் நிறுத்துமிடத்தில் வாகனத்தை திருடிய ஆடவர் கைது

கோலாலம்பூர், ஆக 9- தலைநகர், ஜாலான் பி. ரம்லியில் உள்ள பேரங்காடியில் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த எஸ்.யு.வி. வாகனத்தை திருடியதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு ஆடவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 12.48 மணி அளவில் நிகழ்ந்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹான் யாஹ்யா கூறினார்.

அந்த எஸ்.யு.வி. வாகனத்தின் உரிமையாளரான 31 வயது ஆடவர் பேரங்காடியின் கார் நிறுத்துமிட பராமரிப்பாளரிடம் வாகனத்தின் சாவியைக் கொடுத்துச் சென்ற வேளையில் அந்த பராமரிப்பாளர் அந்த வாகனத்தை பேரங்காடியில் இருந்து வெளியேறும் பிரதான சாலையின் ஓரம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் என அவர் சொன்னார்.

சுமார் பத்து நிமிடம் கழித்து அந்த வாகனத்தை எடுப்பதற்காக சாவியுடன் அங்கு சென்ற கார் நிறுத்துமிடப் பராமரிப்பாளர், வாகனம் அங்கு காணப்படாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பிற்பகல் 1.20 மணியளவில் பேரங்காடியிலிருந்து வெளியே அந்த அலங்காரக் கலை வடிவமைப்பாளரான அந்த வாகனத்தின் உரிமையாளர் தனது வாகனம் திருடு போனதை அறிந்து உடனடியாக போலீசில் புகார் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

பின்னர் காவல் துறையினர் இந்த வாகனத் திருட்டு தொடர்பில் களத்தில் இருந்த அனைத்து போலீஸ் ரோந்து வாகனங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

பிற்பகல் 2.35 மணியளவில் சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 1 அவென்யூவில் அந்த வாகனத்தைக் கண்ட போலீஸ் ரோந்துக் காரிலிருந்த போலீசார் அதனைத் தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும் அந்த வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த ஆடவரை அவர்கள் வெற்றிகரமாக மடக்கிப் பிடித்தனர் என்றார் அவர்.

கைது செய்யப்பட்ட 58 வயது ஆடவர் போதைப் பொருள் தொடர்பில் இரு குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 379ஏ பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :