MEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர்  தோல்வியுற்றால் மலேசியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்- மந்திரி புசார் கூறுகிறார்

ஷா ஆலம், ஆக 2- நாட்டின் பொருளாதாரத்தின் நாடித்துடிப்பாக விளங்கி வரும் சிலாங்கூர் ஒருபோதும் தோல்வியுறக் கூடாது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். மலேசியாவுக்கு சிலாங்கூர் எத்தகைய முக்கியமான மாநிலம் என்பதை விவரிக்கும் விதமாக அவர் இக்கூற்றை வெளியிட்டார்.

நாம் தோல்வியடையக் கூடாது என்பது மாநில நிர்வாகத்திற்கு நான் வழங்கும் நினைவுறுத்தலாகும். நாம் தோற்றால் அது நாட்டிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

நமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும் பட்சத்தில் கூட்டசு பொருளாதாரமும் சீர்குலையும். அதன் தாக்கத்தை அனைத்து சமூகம் உணரும் நிலை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு இந்தான் அமைச்சர் நிலை கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார். அவரது உரையை சிலாங்கூர் டிவி நேரடியாக ஒளிபரப்பியது.

கடந்த 2023ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25.9 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கியதன் மூலம் சிலாங்கூர் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான முக்கிய பங்களிப்பளராக விளங்கி வருவதை கடந்த ஜூலை 2ஆம் தேதி புள்ளிவிபரத் துறை வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டியது.

கடந்த 2018ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23.7 விழுக்காட்டையும் 2019ஆம் ஆண்டு 24.1 விழுக்காட்டையும் 2020ஆம் ஆண்டு 24.3 விழுக்காட்டையும் 2021ஆம் ஆண்டு 24.8 விழுக்காட்டையும் 2022ஆம் ஆண்டு  25.5 விழுக்காட்டையும் பங்களிப்பாக வழங்கியதன் மூலம் சிலாங்கூர் அண்மைய ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார உந்து சக்தியாக தொடர்ந்து விளங்கி வருகிறது.

சிலாங்கூரின் இந்த அபரிமித வளர்ச்சியின் காரணமாக உயர் வருமானம் கொண்ட மாநில அந்தஸ்தை சிலாங்கூர் பெற்றுள்ளதை உலக வங்கி அண்மையில் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

இந்த சாதனைகளைக் கண்டு மாநிலம் சொகுசாக இருந்து விடக் கூடாது என்பதோடு பழைய செயல்முறைகளை திரும்ப அமல்படுத்துவதன் மூலம் புதிய முடிவுகளை எதிர்பார்க்கவும் கூடாது என அமிருடின் வலியுறுத்தினார்.


Pengarang :