ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு  மானியம்- புரிந்துணர்வு ஒப்பந்தம் தயார்

புத்ராஜெயா, ஆக  3 – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான  மானிய ஒதுக்கீடு  தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த நகல் (எம்.ஓ.யு) இறுதி செய்யப்பட்டு தற்போது சமர்ப்பிக்க தயாராக உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தெரிவித்தார்.

பெரிக்கத்தான்  நேஷனலின் தலைமைக் கொறடாவான  டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசனிடம் இந்த நகல் ஒப்பந்தத்தை  வழங்குமாறு தாம்  பணித்துள்ளதாக எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான  ஃபாடில்லா கூறினார்.

இன்று புத்ராஜெயா கார் இல்லா நாள் திட்டம் மற்றும் சிவில் சர்வீஸ் பிரீமியர் அசெம்பிளி 2024 ஓட்டம் ஆகியவற்றைத் தொடங்கிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மதிப்பாய்வுக்காக இந்த நகல்  ஒப்பந்தத்தை  டத்தோ தக்கியுடினிடம்   நான் அனுப்புவேன்.
அவர்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்திற்கு இடையே ஒரு கூட்டுக் குழு கூட்டத்திற்கு நாங்கள்  ஏற்பாடு செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு மானிய ஒதுக்கீடு சிக்கலைத் தீர்ப்பது தொடர்பான விவகாரம் சிக்கலானதாக இருக்கக்கூடாது என்று கடந்த  ஜூலை 9 ஆம் தேதி   அன்வார் வலியுறுத்தியிருந்தார்.

எந்தவொரு எதிர்க்கட்சி உறுப்பினரும் நிதி ஒதுக்கீடுகளை கோருவது நேரடியானது என்பதோடு  நிலையான பேச்சுவார்த்தை மற்றும் ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதி என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :