NATIONAL

எஸ்பிஆர்எம் சிலாங்கூரில் உள்ள ஈசா சமாட் வீட்டை சோதனையிட்டனர்

ஷா ஆலம், ஆகஸ்ட் 16:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நேற்று இரவு முன்னாள் பெல்டா குலோபல் வெண்ட்செர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஈசா சமாட்டின் வீட்டை சோதனையிட்டனர். இத்தகவலை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோ ஸூல்கிப்ளி அமாட் உறுதிப் படுத்தியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சோதனை இயல்பான ஒன்று என்றும் தமது தலைமையிலான ஊழல் தடுப்பு ஆணையம் ஒருவரை லஞ்ச ஊழல் தொடர்பில் தடுத்து வைத்த பிறகு நடத்தப்படும் நடைமுறையே என ஸூல்கிப்ளி அமாட் கூறினார்.

”  இது எப்போதும் போல செயல்படுத்தப்படும் நடைமுறையே. கைது செய்யப்பட்ட பிறகு, சந்தேக நபரின் வீட்டில் சோதனை இடுவது இயல்பான ஒன்று,” என்று பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளார்.

ஸூல்கிப்ளி மேலும் கூறுகையில், ஊழல் தடுப்பு ஆணையம், இன்று புத்ரா ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஈசா சமாட்டை தடுப்பு காவலில் வைக்க விண்ணப்பம் செய்யும் என்றார்.

தற்போது தரை பொது போக்குவரத்து ஆணையத்தின் தலைவராக இருக்கும் ஈசா சமாட்டை பெல்டா இன்வெஸ்ட்மெண்ட் கோப்ரேஷன் நிறுவனம் லண்டன் மற்றும் கூச்சிங்கில் வாங்கிய தங்கும் விடுதி விசாரணைக்கு வந்த போது நேற்று மாலை 2.40 க்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே ஸூல்கிப்ளி, ஊழல் தடுப்பு ஆணையம், பினாங்கு சுகாதாரம், சமூக நலம், பரிவுமிக்க சமுதாயம் மற்றும் சுற்றுச் சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் பீ பூன் போ மீது மீண்டும் மேல்முறையீடு நீதிமன்றத்தில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்படும் என்று தெரிவித்தார். தேசிய தலைமை வழக்கறிஞர் அலுவலகம் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்து இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று விவரித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :