NATIONAL

1எம்டிபி: பாக்காத்தான் தலைவர்களை எப்போது அருள் கந்தா சந்திக்க போகிறார்?

கோலா லம்பூர், ஆகஸ்ட் 8:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைவர்கள் இன்னொரு தடவை 1எம்டிபி தலைமை செயல் அதிகாரி, அருள் கந்தா கந்தசாமிக்கு அழைப்பு விடுத்து 1எம்டிபி நெருக்கடி தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 1எம்டிபி, தனது கடன் தொகையான ரிம 2.58 பில்லியனை எப்படி இன்டர்நேஷனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திற்கு (ஐபிஐசி) செலுத்த போகிறது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரிய இதுவே சரியான தருணம் என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் தோனி புவா கூறினார்.

இதற்கு முன்பு தாம் பரிந்துரைத்த அழைப்பை புறக்கணித்து விட்டதாகவும், ஆனால் திடிரென தோன்றி பாஸ் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர்களுடன் விளக்கம் அளித்தது தமக்கு வேதனையாக இருக்கிறது என்றார்.

தோனி புவா மேலும் கூறுகையில், அருள் கந்தா, பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைவர்களுக்கும் பாஸ் கட்சிக்கு கிடைத்த வாய்ப்பை வழங்கி இருக்கலாம் என்று தெரிவித்தார்.

”   நான், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி சார்பில் மீண்டும் அருள் கந்தா அவர்களை எங்கள் தரப்பிற்கு விளக்கம் அளிக்க வேண்டும். மக்களின் சார்பில் எங்களின் தலைவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே விளக்க வேண்டும். எனது சார்பாக மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி குறிப்பாக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மற்றும் துன் மகாதீர் முகமட் சில கேள்விகள் கேட்க இருக்கிறோம். நிறைய கேள்விகள் உள்ளன. ஐபிஐசிக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை எப்படி அடைக்க போகிறீர்கள்?” என்று விளக்கினார்.

பாஸ் கட்சி நேற்று நடைபெற்ற 1எம்டிபி கடன் தொகை மற்றும் திருப்பி செலுத்தும் கடன் திட்டம் குறித்து அருள் கந்தாவிடம் விளக்கம் பெற்ற பின் மன திருப்தி அடைவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 1-இல் அபுதாபி அரசாங்க நிறுவனமான ஐபிஐசி ஐந்து வேலை நாட்களில் 1எம்டிபி நிறுவனம் ரிம 2.58 பில்லியன் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று நினைவுறுத்தியது.

இதே போன்று, லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸா அன்வர், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பதில் கிடைக்க வேண்டிய அவசியம் உண்டு. அருள் கந்தாவிற்கு விளக்கம் அளிக்க பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி 24 மணி நேரம் கெடு விதித்து உள்ளது என்றார்.

”   1எம்டிபி ஏன் உலகம் முழுவதும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கு கேட்கும் உரிமை உண்டு. ஏன் மலேசியா நாட்டின் நற்பெயர் சீரழிந்து போகும் அளவிற்கு இருக்கிறது? நம்மை பார்த்து ஏன்  திருடர்கள் நாடு என கேவலமாக பேசுகிறார்கள்? நாட்டின் நற்பெயரை காப்பாற்ற, அருள் கந்தாவை பயப்படாமல் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கெஅடிலான் மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, திரைமறைவில் சந்திக்கவும் தயாராக இருக்கிறோம்,” என்று உறுதியாக கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :