NATIONAL

மலேசியர்களாய் ஒன்றுப்பட்டு உயர “பங்சா மலேசியா” வழிகோலும்

சிலாங்கூர் மாநிலம் இம்மாநில வாழ் மக்களின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை மேற்கொண்டு வரும் நிலையில் மாநில வளர்ச்சியோடு நாமும் கைகோர்த்து பயணிக்க இனம்,மதம்,அரசியல் வேறுபாடு ஆகியவற்றை ஒதுக்கி விட்டு நாம் அனைவரும் ஒரே புரிந்துணர்வு இலக்கோடு சிந்திக்க வேண்டும்.அவ்வகையில்,மதம்,இனம் கடந்து புரிந்துணர்வோடு கைகோர்க்கும் “பங்சா மலேசியா” எனும் உயரிய சிந்தனை நாம் மலேசியர்களாய் ஒன்றுப்பட்டு உயர வழிகோலும்.

பங்சா மலேசியா என்பது நாம் நமது உரிமைகளை விட்டுக்கொடுப்பதல்ல. மாறாய்,ஒரு இலக்கை நோக்கி முன்னெறிக்கொண்டிருக்கும் போது தடைகளாய் இருக்கும் சில விசயங்களை நாம் புரிந்துணர்வின் அடிப்படையில் விட்டுக் கொடுப்பதே ஆகும்.நாம் மதம்,இனம் சார்ந்திருக்காமல் ஒரே உணர்வோடு மலேசியர்கள் எனும் நிலையில் சிந்திக்கும் போது நாம் நாட்டின் வளர்ச்சியோடு கைகோர்த்து முன்னேற முடியும்.

பங்சா மலேசியா எனும் போது இங்கு பிரிவினைகளும் ஏற்றத்தாழ்வும் உடைப்படுகிறது. மலேசியர்கள் எனும் நிலையில் அனைவருக்கு வாய்ப்புகள் போய்சேர்கின்றன.இருப்பினும்,நம்மிடையே ஆட்கொண்டிருக்கும் சில தவிர்க்க முடியாத இயலாமைகள் வாய்ப்பினை நாம் நன் முறையில் பயன்படுத்திக் கொள்ள தடையாக இருப்பதோடு எல்லாம் கைநழுவி சென்ற பின்னர் நமக்கு எதுவுமே கிடைக்கவில்லை என புலம்புகிறோம்.அதுமட்டுமின்றி,நமது இயலாமையை கூட மற்றவர்கள் மீது திணிக்கவே முயல்கிறோம்.

மலேசியாவில் இருக்கும் மாநிலங்களிலேயே ஆக்கப்பூர்வமாகவும் திறன்மிக்க நிர்வாகத்தோடு இயங்கி வரும் சிலாங்கூர் அரசாங்கம் தொடர்ந்து இம்மாநில மக்களுக்கான நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருவதை சிலாங்கூர் வாழ் மக்கள் அனைவரும் அறிவார்கள்.இந்நிலையில்,அவை யாவும் இனம்,மதம் ரீதியில் பிரிக்கப்பட்டால் அஃது ஒருவேளை நமக்கு எட்டாக்கனியாககூட போகலாம்.

ஆனால்,மாநில மந்திரி பெசாரும் அவர் தலைமையிலான மாநில அரசாங்கமும் இங்கு உருவாக்கப்படும் ஒவ்வொன்று அமல்படுத்தப்படும் ஒவ்வொன்றும் இனம் ரீதியிலும் மதம் ரீதியிலும் கணக்கிடாமல் அவை அனைத்தும் சிலாங்கூர் வாழ் மக்கள் அனைவருக்கும் பேதமின்றி போய்சேர வேண்டும் என்பதையே இலக்காக கொண்டு செயல்படுகிறார்கள்.இந்த பேதமற்ற போக்குதான் நாளை “பங்சா மலேசியா”எனும் ஆழமரமாய் உருவெடுக்கப்போகிறது.

இதனை பறைச்சாற்றும் வகையில் சிலாங்கூர் மாநிலம் மலேசியாவிற்கே முன்மாதியாக அன்மையில் ஒரே உணர்வை கொண்ட சமூகத்தை கட்டமைக்கும் முயற்சியாக ஆய்வியல் இலக்கை முன்னெடுத்துள்ளனர். இதில் இந்தியர்கள் எம்மாதிரியான நன்மைய அடையப்போகிறார்கள். அவர்களின் தேவைகளும் உரிமைகளும் எத்தகையில் மாநில வளர்ச்சியோடு கைகோர்த்து உயரப்போகிறது என்பதை அறிவார்ந்த நிலையிலும் ஆய்வுப்பூர்வமாகவும் முன்னெடுக்க டெனிசன் ஜெயசூரியா மற்றும் எடின் கோ ஆகியோரை மாநில அரசாங்கம் நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாட்டில் ஒரு இனம் ஓரங்கட்டவோ அல்லது ஒதுக்கப்படவோ பட்டால் அந்நாட்டு நிர்வாகத்திறன் தோல்வி அடைந்துள்ளதாக கருதப்படும். இந்நிலையில், அத்தக்கைய தோல்வியினை கடந்த 60 ஆண்டுகளால் தேசிய முன்னணி அரசாங்கம் சந்தித்து வருவதை நாம் மறுத்திட முடியாது.இருப்பினும் அவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்து வருவதற்கு மக்களிடையே மேலோங்காத அரசியல் விழிப்புணர்வும் ஒரு காரணம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளதான் வேண்டும்.
ஆனால்,கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் அரசியல் மாற்றம் தேசிய முன்னணியை ஆட்டம் காண வைத்தது.அதற்கு ஒரே காரணம் மக்களிடையே எழுந்த அரசியல் விழிப்புணர்வு மட்டுமில்லை.மாறாய், இளம் தலைமுறையிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்திய “பங்சா மலேசியா” எனும் உள்ளுணர்வுதான் என்பதையும் நினனவுறுத்த வேண்டியுள்ளது.

நான் மலேசியன்.இது என் நாடு.இங்கு எனக்கும் முழு உரிமை உண்டு எனும் எண்ணம் இளம் தலைமுறையை பற்றிக் கொண்ட போது நாட்டில் அரசியல் மாற்றங்களை காண முடிந்ததோடு எல்லாமே எல்லாருக்கும் எனும் “பங்சா மலேசியா” சித்தாந்தமும் உயிர்ப்பெற்றது.
கடந்தக்காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது நாம் மலேசியர்கள் எனும் உணர்வு மேலோங்க தொடங்கி விட்டது.இங்கு ஏற்றத்தாழ்வு இல்லை.முதலில் நாம் மலேசியர்கள் பின்னர்தான் மதம் இனம் சார்ந்தவர்கள் எனும் சிந்தனை சிலாங்கூர் மட்டுமின்றி நாட்டில் அனைத்து நிலை மக்களிடமும் உயிர்ப்பிக்க தொடங்கியிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டு வளர்ச்சிகும் பெரும் களமாக அமைய போகிறது என்பது உறுதி.
நாம் நாளை புத்ரா ஜெயாவை கைப்பற்றி ஆட்சி செய்யும் போது நாட்டின் துரித வளர்ச்சியில் விடுப்படாமலும் தொலைந்தும் போகாமல் இருக்க “பங்சா மலேசியா” எனும் அறிவார்ந்த சிந்தனையோடு கைகோர்த்து நாளைய தலைமுறையின் நம்பிக்கையான எதிர்காலத்திற்கு வித்திட வேண்டும்.உலக வளர்ச்சியோடு நாட்டின் வளர்ச்சியோடும் மேம்பாடு காண வேண்டுமானால் நாம்மோடு நமது அடுத்த தலைமுறைக்கும் நாம் “பங்சா மலேசியா” எனும் தாரகமந்திரத்தை சிந்தையில் ஏற்றி உணர்வினை மேலோங்க வைக்க வேண்டும்.
முன்னேறுவோம் முன்னெற்றுவோம் “பங்சா மலேசியா”வுடன்.

அன்புடன்
குணசேகரன் குப்பன்


Pengarang :