NATIONAL

உள்நாட்டு பொருளாதாரத்தில் அஸ்மின் கவனம், அமெரிக்கா பொருளாதாரம் குறித்து நஜிப் கவலை

ஷா ஆலாம், அக்டோபர் 11:

சிலாங்கூர் மாநிலம் மற்றும் மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அதனை ஆக்கப்பூர்வமாக நிலைக்கு உயர்த்தவும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தனித்துவ கவனம் செலுத்தி வருகிறார்.அதற்காக அவர் பல்வேறு நாடுகளின் முதலீட்டை கவரும் முயற்சியில் களமிறங்கி அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.
அன்மையகாலமாய்,ஜப்பான்,தைவான்,சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடன் பெல்ஜியம் உடப்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்ட சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அவரது ஒவ்வொரு நாட்டுக்கான பயணமும் சிலாங்கூர் மாநிலத்திற்கு முதலீட்டை கொண்டு வருவதோடு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

அதிகமான வெளிநாட்டு முதலீடுகள் அன்மையகாலமாய் சிலாங்கூரில் தொடர்ந்து அதிகரித்து வருவது இம்மாநிலத்தின் தலைமையத்துவமும் அதன் நிர்வாகத்திறனின் ஆளுமைக்கும் தக்க சான்று என்பது குறிப்பிடத்தக்கது.கார் நிறுவனங்கள் முதல் அதீநவீனத்துவ நிறுவனங்களும் தங்களின் முதலீட்டை சிலாங்கூரில் மேற்கொள்வதற்கு மாநில அரசாங்கத்தின் விவேகமான செயல்பாடுகள் பெரும் பங்காற்றி வருகிறது.

அதேவேளையில்,வெளிநாடுகளும் சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சி அதன் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார திட்டமிடலை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு உலக அளவிலான வர்த்தகத்திற்கு சிலாங்கூர் மாநிலம் சரியான தலம் என்பதை கண்டறிந்துள்ள நிலையில் அவர்கள் கவனம் எல்லாம் சிலாங்கூர் மாநிலத்தின் மீது திரும்புயுள்ளது என்லாம்.அதற்கு தக்க சான்றாய் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக வர்த்தக மாநாடு விளங்குகிறது.

தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டு மந்திரி பெசார் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாடும் நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு வித்திடும் அதேவேளையில் சிலாங்கூர் வாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றும்.

இந்நிலையில்,நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மேற்கொண்ட அமெரிக்கா பயணம் மலேசியர்களுக்கு பெரும் அதிர்ச்சியான ஒன்றாக விளங்கியதோடு அஃது சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் செயல்ப்பாடுகளுக்கு எதிர்மறையான நிலையையும் கொண்டுள்ளது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு மலேசியா உதவும் என பிரதமர் கூறியிருப்பது வேடிக்கையாகவே உள்ளது.

மலேசியாவின் இன்றைய பொருளாதார சூழல் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு உதவுவோம் என்பது ஐயத்திற்குரியது.நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார சுமையிலிருந்து மக்களை விடுவிக்கவும் ஆக்கபூர்வ செயல்பாடுகளும் விவேகமான சிந்தனைகளையும் முன் வைக்காத பிரதமர் அமெரிக்காவின் பொருளாதாரத்தை குறித்து கவலைப்படுவது,அவர் தனது பொறுப்பையும் கடமையையும் இன்னும் உணரவில்லை என்றுதான் கூற வேண்டும்.

அமெரிக்காவின் பொருளாதார மேம்பாட்டிற்கு தொழிலாளர்களின் சேமிப்புப் பணமாக இபிஎப் சேமிப்புப் பணத்தை குறி வைப்பதும் ஏற்புடையதல்ல.அஃது தொழிலாளர்களின் உரிமையை உறிஞ்சுவதற்கு ஈடானது.நாட்டில் ரிங்கிட்டின் மதிப்பு நிலையில்லாமல் இருக்கிறது.பொருளாதார நிலையோ மந்தமாய் இருக்கிறது.இச்சூழலில் அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்து கவலைப்படுவது அர்த்தமற்றது என்பதை மலேசியர்கள் உணர வேண்டும்.

சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார நிலையும் அதன் வளர்ச்சியும் வெளிநாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் நாளைய நம்பிக்கையான மலேசியாவை உருவாக்க மக்களுக்கு யார் தேவை என்பதை மக்கள் நன்கு உணர வேண்டும்.மத்திய தேசிய முன்னணி அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்துடனும் அதன் ஆக்கபூர்வ தலைமைத்துவத்தோடும் ஒப்பிட்டு,சீர்த்தூக்கிப்பார்த்து மக்களுக்கான நன்மையையும் திட்டங்களையும் ஏற்படுத்தப் போவது யார்?மக்களுக்காகவே சிந்திக்கும் அரசாங்கம் யார்? என்பதை மக்கள் தான் விவேகமாய் முடிவெடுக்க வேண்டும்.டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமையிலான அரசாங்கம் மக்களுக்காக பரிவு மிக்க,மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் அக்கறைக் கொண்ட அரசாங்கம் என்பதில் சிலாங்கூர் வாழ் மக்கள் என்றுமே தனித்துவ நம்பிக்கையை கொண்டுள்ளனர் என்பதில் பெருமிதமே.

இவ்வேளையில்,சிலாங்கூர் வாழ் இந்தியர்களை போல நாட்டில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் சிந்தனை மாற்றத்திற்கு தயாராகி நாளைய நம்பிக்கையான மாநில அரசாங்கத்தை மட்டுமின்றி மத்திய அரசாங்கத்தையும் தேர்வு செய்ய நாம் கொண்டாடவிருக்கும் தீபாவளித் திருநாளில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.நமது நாளைய தலைமுறை புதிய மலேசியாவில் நம்பிக்கையான மலேசியர்களாய் சிறந்த எதிர்காலத்துடன் பயணிக்க நாம் இன்றே வித்திடுவோம்.

“அனைவருக்கும் எங்களின் இனிய மக்கள் தீபாவளி வாழ்த்துகள்”

நன்றி

கு.குணசேகரன் குப்பன்

ஆசிரியர் சிலாங்கூர் இன்று


Pengarang :