SELANGOR

2018-இன் சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்

நாட்டின் 14வது பொது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இம்முறை மத்திய அரசாங்கமும் சிலாங்கூர் மாநில அரசாங்கமும் தாக்கல் செய்த பட்ஜெட் அனைத்து தரப்பின் கவனத்தையும் ஈர்த்த வேளையில் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தாக்கல் செய்த சிலாங்கூர் மாநில பட்ஜெட் சிலாங்கூர் வாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உன்னத பட்ஜெட்டாக இருந்ததை யாரும் மறுத்திடலாகாது.

சிலாங்கூர் வாழ் மக்களின் வளர்ச்சியிலும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் தனித்துவ கவனம் செலுத்தி வருவதில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒருபோதும் சோடைப்போனதில்லை என்பதற்கு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசாங்கம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட் பெரும் சான்று எனலாம்.அவ்வகையில் மாநில அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டு பட்ஜெட் சிலாங்கூர் மாநில வாழ் மக்களுக்கு தனித்துவ பட்ஜெட்டாக இருந்தாலும் இந்திய சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உன்னத பட்ஜெட் என்பதில் சிலாங்கூர் வாழ் இந்தியர்கள் பெருமைக் கொள்ளதான் வேண்டும்.

சிலாங்கூர் வாழ் இந்தியர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் அவர்களின் தனித்துவ வளர்ச்சிக்கும் 2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பெரும் கவனம் செலுத்தியுள்ளார். இம்மாநிலத்தின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் எந்தவொரு இனமும் கைவிடப்படாது அல்லது புறக்கணிக்கப்படாது என்பதற்கு சான்றாக 2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமுதாயம் பெருமிதம் கொள்ளும் நிலையிலான பட்ஜெட்டை மந்திரி பெசார் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மந்திரி பெசார் தாக்கல் செய்த 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய சமுதாயம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் நன்மை பெறும் பல திட்டங்கள் அதில் அடங்கியுள்ளதை நாம் ஒப்புக் கொள்ளதான் வேண்டும்.தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 லட்சமும் ஆலயங்களின் செயல்பாடுகளுக்கு 17 லட்சமும் ஒதுக்கியுள்ளது மாநில அரசாங்கத்தின் தனித்துவ சிறப்பு எனலாம்.அதேவேளையில்,சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய தொழில் முனைவர்களை உருவாக்கவும் இயங்கி வரும் தொழில் முனைவர்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்தவும் ஒதுக்கப்பட்ட 30 லட்சம் ஒதுக்கீடு இந்திய சமுதாயத்தின் குறிப்பாக இளம் தலைமுறையின் மீது மந்திரி பெசார் கொண்டிருக்கும் அக்கறையையும் பரிவையும் தெளிவாக காட்டுக்கிறது.

அதேவேளையில்,இலவச குடிநீர் ,பி.பி.ஆர் வாடகை தள்ளுபடி, தோட்டப்புற மாணவர்களுக்கான பேருந்து நிதி,யு.பி.எஸ்.ஆர் ஊக்குவிப்பு தொகை, பல்கலைக்கழகம் செல்லும் உதவி தொகை என தொடரும் உதவிகளோடு வறுமை ஒழிப்பு திட்டம்,அரசு ஊழியர்களுக்கு 3மாத போனஸ் குறிப்பாக அதில் இந்திய சமூகத்தலைவர்கள் நன்மை பெறுவார்கள்,இவ்வாறு தொடரும் ஒவ்வொரு ஒதுக்கீடு திட்டங்களிலும் இந்திய சமுதாயம் தனித்துவமான வாய்ப்பினையும் நன்மையையினை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில்,மாதம் ஒன்றுக்கு 2000 வெள்ளிக்கும் குறைவான சம்பளம் பெறும் தாய்மார்களுக்கு மாதம் ஒன்று வெ.200 எனும் நிலையில் வருடத்திற்கு வெ.2400 வழங்கிட மந்திரி பெசார் நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் நிலையில் இதில் வேலைக்கு செல்லும் இந்திய குடும்ப மாதுகள் பெரும் நன்மைகள் அடைவார்கள் என்றால் அஃது மறுப்பதற்கில்லை.மேலும்,பெடுலி சிஹாட் மருத்துவ அட்டையின் உதவியை தொகையினை வெ.500லிருந்து வெ.700ஆக உயர்த்தியதன் மூலம் இந்திய சமுதாயம் அதில் நன்மை அடைய வாய்ப்பு பிரகாசமாக இருப்பதையும் மறுத்திட முடியாது.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பட்ஜெட்டோடு அன்மையில் தேசிய முன்னணியின் சார்பில் மத்திய அரசாங்கம் தாக்கல் செய்த பட்ஜெட்டை ஒப்பிடுகையில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பட்ஜெட் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வித்திடும் பட்ஜெட்டாக சிலாங்கூர் மாநில அரசாங்க பட்ஜெட் திகழும் அதேவேளையில் பிரதமர் நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டின் 14வது பொது தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் இனிப்பு பட்ஜெட்டாகவே காட்சியளிக்கிறது எனலாம்.
தேசிய முன்னணி அரசாங்கத்தின் பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்காக தனித்துவமாக எதுவுமே இல்லை.அறிவிக்கப்பட்டதெல்லாம் வெறும் இனிப்பு வார்த்தைகள் மட்டுமே.இந்திய சமுதாயத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் நஜிப் தாக்கல் செய்த பட்ஜெட் பெரும் ஏமாற்றமான பட்ஜெட்டாகவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி,தொழில் திறன்.தொழில் முனைவர்,ஆலங்கள்,தமிழ்ப்பள்ளிக்கூடங்கள்,வேலை வாய்ப்புகள்,பொருளாதாரம் என தொடரும் எந்தவொரு துறையிலும் இந்திய சமுதாயம் நன்மை அடையும் நிலையிலான ஒதுக்கீடுகள் எதுவும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தனித்துவமாய் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை.மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் இந்திய சமுதாயத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகவே தேசிய முன்னணியின் ஆட்சியில் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டு வருவதை மலேசிய இந்தியர்கள் மறந்துவிடவில்லை.

பிரதமர் தாக்கல் செய்த பட்ஜெட் இந்திய சமுதாயத்தினை உயர்த்த போகும் பட்ஜெட்,இந்திய சமுதாயத்திற்கான பட்ஜெட் என்றெல்லாம் சிலர் வானுயர கோசமிடலாம்.ஆனால்,உண்மையில் மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் இந்திய சமுதாயத்தை தொடர்ந்து ஏமாற்றி வரும் பட்ஜெட்தான் என்பதை நஜிப் தாக்கல் செய்த பட்ஜெட்டை நன்கு ஆராய்ந்தால் சாமானிய மக்களால் கூட உணர முடியும்.
எதிர்கட்சிகளால் நாட்டை ஆள முடியாது.அவர்களுக்கு நிர்வாகத்திறன் இல்லை என்றெல்லாம் வசைபாடிய வாய்கள் கூட சிலாங்கூர் மாநிலத்தில் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தாக்கல் செய்த மக்களுக்கான பட்ஜெட்டை கண்டு வாயடைத்து போனார்கள் என்பதுதான் நிஜம்.மாநிலத்தை மிகவும் திறமையாகவும் திறன் மிக்க நிலையிலும் ஆட்சி புரியும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தை எதிர்கட்சிகள் கைப்பற்றினால் எவ்வாறெல்லாம் திறனோடு ஆட்சி புரிவார்கள் என்பதற்கு முன்மாதிரியாகவும் பெரும் சான்றாகவும் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் ஒட்டுமொத்த சிலாங்கூர் வாழ் மக்களின் மேம்பாடும் வளர்ச்சியும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும் அதேவேளையில் இந்திய சமுதாயத்தின் வாழ்வாதாரத்தையும் சிறக்க வைக்க நன் நிலையிலான திட்டங்களும் ஒதுக்கீடுகளும் மந்திரி பெசாரால் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் சிலாங்கூர் வாழ் இந்தியர்கள் தொடர்ந்து டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் ஆதரவு அளிப்பதோடு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் வாயிலாக நன்மை அடைவதற்கான பெரும் முயற்சியினையும் அதற்கான செயல்பாடுகளையும் விவேகமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
தேசிய முன்னணியின் இனிப்பு பட்ஜெட்டை நம்பி ஏமாந்து விட வேண்டாம்.சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மக்கள் வாழ்வாதாரம் போற்றும் பட்ஜெட்டை ஆழமாக சிந்தையில் ஏற்றி நாட்டில் புதியதொரு மறுமலர்ச்சி ஏற்பட சிந்தனை மாற்றத்தை அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து விதையுங்கள்.இன்றைய சிந்தனை நாளைய தலைமுறையின் நம்பிக்கையான எதிர்காலம்.
நன்றி

கு.குணசேகரன்


Pengarang :