SELANGOR

யுனிசெல்லில் ‘ஒரு பொன்மாலை பொழுது’

பெஸ்தாரி ஜெயா, டிசம்பர் 4:

கடந்த டிசம்பர் 1 முதல் 3 வரை சிலாங்கூர் பல்கலைக் கழகத்தில் (யுனிசெல்) விமரிசையாக கொண்டாடப்பட்ட பல்கலைக் கழக திறந்த விழாவின் இறுதி நாளில் இந்தியர்களுக்காக ‘ஒரு பொன் மாலை பொழுது’ நிகழ்ச்சி பல்வேறு ஆடல், பாடல், நகைச்சுவை அங்கங்களோடு இனிதே நிறைவுற்றது. விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசய்யா மாநில அரசாங்கம் யுனிசெல்லுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை நினைவு கூர்ந்தார்.

மேலும் பேசுகையில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமையில் பல்கலைக் கழக மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம், கல்விக் கடனுதவி, பெடுலி சிஸ்வா நிதி உதவி போன்றவை மூலம் உதவிகள் செய்து வருகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் யுனிசெல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் முகமட் ரிடுவான் ஓத்மான், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் நிக் நஸ்மியின் சிறப்பு செயலாளர் மு.ராஜா, இணை பேராசிரியர் முனைவர் குணசேகரன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலைநிகழ்ச்சியை தலைமையேற்ற ‘திஎச்ஆர்’ புகழ் உதயா, நகைச்சுவைக்கு பெருமாள் மற்றும் முருகேசு மற்றும் தமிழ் இந்தி பாடல்களை உள்ளூர் கலைஞர்கள் சிறப்பாக படைத்து வந்தவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் இட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இணை பேராசிரியர் குணசேகரன் மூன்று நாட்கள் நடைபெற்ற பல்கலைக் கழக திறந்த விழா வெற்றி பெற்றாலும் இந்திய சமுதாயத்தின் ஆதரவு மிகவும் குறைந்த நிலையில் உள்ளது என்று கூறியுள்ளது வேதனை அளிக்கிறது.

”  பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை ஈர்க்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தோம். அருகாமையில் உள்ள பத்தாங் பெர்சுந்தை நகர மக்கள் கூட இங்கு வரவில்லை. இனி வரும் காலங்களில் இந்திய சமுதாயம் ஆதரவு வழங்குவதன் மூலம் பல நன்மைகள் சென்று அடைய வாய்ப்பு உள்ளது. யுனிசெல் அடிப்படை கல்வி அல்லது மெட்ரிகுலேசன் கல்வியை இலவசமாக வழங்குவது குறித்து நமது சமுதாயம் பயன் அடைய வேண்டும். மலேசியாவிலே அதிகமாக இந்திய மாணவர்கள் இங்கு கல்வி பயில்கிறார்கள்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு  தெரிவித்தார்.

#தமிழ் அரசன்


Pengarang :