SELANGOR

சிலாங்கூர் மாநில இந்திய கிராமத்து தலைவர்களின் கருத்தரங்கு சிறப்பாக நடந்தேறியது

ஷா ஆலம், பிப்ரவரி 11:

சிலாங்கூர் இந்திய கிராமத்துத்  தலைவர்களின் ஏற்பாட்டில் பரிவுமிக்க மக்கள் நலதிட்டக் கருத்தரங்கு கடந்த  ஞாயிற்றுக்கிழமை, சிலாங்கூர் ஆட்சிக் குழு வீடமைப்பு மண்டபத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமைத்துவத்தின் கீழ் மாநில அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வழி சேவையாற்றி வருகிறது என்று தமது உரையில் குறிப்பிட்டார். இந்த பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களை (ஐபிஆர்) மாநில மக்களுக்கு முழுமையாக சென்றடைய இந்திய கிராமத்துத் தலைவர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். மலாய் மற்றும் சீன கிராமத்துத் தலைவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்திக் கொண்டு தங்களின் உன்னதமான பணியில் கவனம் செலுத்தி வருமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், மாண்புமிகு அமிருடினின் சிறப்பதிகாரியான திரு. ஜஸ்த்தின் ராஜ் அவர்கள் இந்திய இளைஞர்கள் வணிகத்துறையில் மேலும் உயர 2017ம் ஆண்டு 486 பேர் நன்மையடைந்ததைப் போல் 2018ம் ஆண்டு 30 லட்சம் வெள்ளியை எப்படி இளைஞர்களுக்கு பயனடையச் செய்யலாம் என்பதனைப் பற்றி விரிவாகப் பேசினார்.

அதைத் தொடர்ந்து, மேடைப் பேச்சுப் பயிற்சியாளரான திருமதி. வசந்தி பிரான்சிஸ் அவர்கள், கிராமத்துத் தலைவர்கள் எப்படி தங்களின் பேச்சுத் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதை நிகழ்ச்சியில் பேசினார். இதன் வழி சிலாங்கூர் இந்திய கிராமத்துத் தலைவர்கள் திறம்பட பணியாற்ற முடியும் என்று தெரிவித்தார்.

இந்திய சமூகத் தலைவர்கள் எவ்வாறு மக்களை அனுகி, சிலாங்கூர் மாநில அரசின் திட்டங்களை அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதைப் பற்றி சிலாங்கூர் இன்று மாத இதழ் தலைமையாசிரியர் கு. குணசேகரன்  விவரித்தார். சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்காக செய்யும் நன்மைகளை சிலாங்கூர் இன்று பத்திரிகை மற்றும் இணையத்தளம்  வழி எவ்வாறு மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மற்றும் இந்திய கிராமத்துத் தலைவர்கள் எவ்வாறு திறம்பட செயலாாற்ற முடியும் என்பதை சுட்டிக் காட்டினார்.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இந்திய கிராமத்துத் தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் திரு ராஜேந்திரன் ராசப்பன் தலைமையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

#தமிழ் பிரியன்


Pengarang :