NATIONAL

2013-இல் இருந்து 31% வீழ்ச்சியடைந்த ரிங்கிட்டை பற்றி ஏன் நஜீப் மௌனம்?

ஷா ஆலம், பிப்ரவரி 8:

கடந்த 2013-இல் இருந்து மலேசிய ரிங்கிட் நாணயம் 31% வீழ்ச்சி அடைந்து வருகிறது, ஆனாலும் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் இன்று வரை தனது நிர்வாகத்தை தற்காக்க ரிங்கிட் நாணயம் பலமாக உள்ளது என்று பறை சாற்றி வருகிறார் பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் தோனி புவா கூறினார். நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நஜீப் ரசாக் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார் என்று ஜசெகவின் தகவல் பிரிவு தலைவருமான தோனி புவா குற்றம் சாட்டினார்.

”  நான் பிரதமருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன், 13-வது பொதுத் தேர்தலுக்கு பிறகு அமெரிக்காவின் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 2.98 ஆக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது நிர்வாகத்தில் கீழ் மலேசிய ரிங்கிட் 31% வீழ்ச்சி அடைந்துள்ளது,” என்று தனது அறிக்கையில் தோனி புவா கூறியிருந்தார்.

இன்று காலை 9 மணிக்கு ரிம  3.9160/9210 அமெரிக்க டாலருக்கு எதிராக இருந்தது. புதன்கிழமை நாணயச் சந்தை மூடும் போது 3.9070/9100 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

”   1எம்டிபி ஊழலை தொடர்ந்து முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். உலகின் மிகப்பெரிய கிலேப்தோகிராட் என்ற உண்மை உருவத்தை 1எம்டிபி காட்டி இருக்கிறது,” என்று விவரித்தார்.


Pengarang :