NATIONAL

சிலாங்கூர் & பினாங்கு மாநிலங்களை பின்பற்றி கெடா மாநில மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

பாடாங் செராய், ஏப்ரல் 21:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களில் அம்னோ தேசிய முன்னணி மாநிலங்களை விட சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வருகிறது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். ஆகவே, எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் கெடா மாநில மக்கள், அம்னோ தேசிய முன்னணியை புறக்கணித்து சிறந்த அடைவு நிலையை அடைய பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அஸ்மின் அறிவுறுத்தினார்.

” கடந்த 2008-இல் நடந்த 12-வது பொதுத் தேர்தலில் கெடா மாநில மக்கள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தை மாற்றினார்கள். அதே, மாற்றம் மீண்டும் நடத்த முடியும், ஏனெனில் தேர்வு மக்களின் கைகளில் இருக்கிறது. அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது பிரதமரின் கையில் இல்லை. நாம் எதிர் காலத்தில் சிறந்த  சந்ததியினரை உருவாக்கும் நோக்கில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்,” என்று பாடாங் செராய், லாபூ பெசார் இரவு சந்தை வளாகத்தில் நடைபெற்ற பிரதான சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

 

 

 

 

 

கெஅடிலான் கட்சியின் சூறாவளி பயண நிகழ்ச்சியில் கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநில மக்களை 14-வது பொதுத் தேர்தலை முன்னிட்டு சந்தித்து மாற்றத்தை ஏற்படுத்த அஸ்மின் அலி உறுதி எடுத்துள்ளார்.

 

 

 

 

 

”  பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களை (ஐபிஆர்) செயல்படுத்தி சிலாங்கூர் மாநில மக்கள் சிறந்த முறையில் பயனடைந்துள்ளனர். இதில் பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம், ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து, கிராமத்து வீட்டு வரி விலக்கு மற்றும் பல்வேறு திட்டங்களை சிலாங்கூர் மாநில அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. கெடா மாநில மக்கள் ஸ்மார்ட் கெடா பேருந்து வேண்டும் என்றால் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். மே10-இல் கெடா மாநிலமும் இலவச பேருந்து சேவையை பெறுவார்கள்,” என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.


Pengarang :