SELANGOR

அந்நிய நாட்டு வாகன ஓட்டுநரைப் பயன்படுத்துவதா? மாநில அரசு அனுமதிக்காது

ஷா ஆலம், ஜன.11:

அந்நிய நாட்டவரை ஓட்டுநராகப் பயன்படுத்தும் கழிவுப் பொருள் நிர்வகிக்கும் குத்தகை நிறுவனத்தின் நடவடிக்கையை மாநில அரசாங்கம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்வது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பொது போக்குவரத்து மற்றும் புது கிராம மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.

“நிபந்தனைகளைக் கடைபிடிக்கத் தவறிய அந்த குத்தகையாளரின் போக்கை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.”

கேடிஇபி கழிவு நிர்வாக நிறுவனத்துக்கு காரணம் கோரும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாது என்ற உறுதிமொழியும் பெறப்படும் என்றார் அவர்.

முன்னதாக, தம்மிடம் வாகனமோட்டும் அனுமதி இல்லை என்று கூறிய வாங்காளதேசி ஒருவர், கடந்த 8 ஆண்டுகளாக லாரி ஓட்டி வருவதை ஒப்புக் கொள்ளும் வீடியோ ஒன்று பரவலாகப் பட்டது. அதில் அவர் ஓட்டிய லாரி கேடிஇபிடபள்யூஎம் எனும் குத்தகை நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கழிவுப் பொருள் அகற்றும் பணி மீது விழிப்புடன் இருக்கும் பொது மக்களின் பொறுப்புணர்ச்சியை அவர் பாராட்டினார். இதன் காரணமாக துணை குத்தகை நிறுவனத்தின் அத்து மீறல் செயல் மாநில அரசின் கவனத்துக்கு வந்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.

இது போன்ற புகார்களை ஐகிளின் செயலி வாயிலாகவோ 019-2742824 என்ற எண் வழியாக வாட்ஸ்ஆப் அல்லது 1-800-88-2824 அல்லது [email protected] எனும் மின் அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும் என்று பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :